புகையிரதக் கட்டணத்தை பஸ் கட்டணத்தில் பாதியாகக் கொண்ட பொதுக் கொள்கையொன்றை உருவாக்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன இன்று (8) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அவ்வாறான பொதுவான கொள்கை வகுக்கப்படாவிட்டால், சேவையில் ஈடுபடும் புகையிரதங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியாது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
டீசல் விலை உயர்வால் புகையிரத கட்டணமும் உயர்ந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
டீசல் விலை அதிகமாக இருப்பதால் புகையிரதத்தை இயக்குவதற்கான கட்டணமும் அதிகம். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வரை ஒரு புகையிரதத்தை இயக்குவதற்கு சுமார் 1.3 மில்லியன் ரூபா செலவாகும். அந்த புகையிரதத்தில் சுமார் 500 பயணிகள் பயணித்தாலும் 10 இலட்சம் ரூபாவே வருமானம் கிடைப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதன்படி, யாழ்ப்பாணம் செல்லும் ஒவ்வொரு புகையிரதத்தின் மூலமும் ரூ.3 இலட்சம் நட்டம் ஏற்படுகிறது என்றார்.
கொழும்பு மாவட்ட பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி. தொலவத்த எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார்.