கொழும்பு உயர்நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேன்முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீடு செய்துள்ளார்.
வர்த்தகர் ஒருவரை அச்சுறுத்தி உறுதிமொழிப் பத்திரத்தை வலுக்கட்டாயமாக பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் பேரில் ரணதுங்கவுக்கு 5 வருடங்களிற்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு உயர் நீதிமன்றம் நேற்று (6) தீர்ப்பளித்தது.
2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் திகதிக்கும் அதே வருடம் ஜூன் மாதம் 2 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் கொலன்னாவ, மீதொட்டமுல்ல பிரதேசத்தில் சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றிய போது, ஜெராட் மென்டிஸ் தொழிலதிபர் ஒருவரை அச்சுறுத்தி 64 மில்லியன் ரூபாவை கோரியதாக அப்போதைய மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அவரது மனைவி மொரீன் ரணதுங்க மற்றும் நரேஷ் பாரிக் ஆகியோருக்கு எதிராக கடந்த அரசாங்கத்தின் காலப்பகுதியில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் மூன்றாவது குற்றவாளியாக குறிப்பிடப்பட்டுள்ள நரேஷ் ஃபாரிக் தற்போது நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதால், அவர் இல்லாமல் வழக்கை தொடர நீதிமன்றம் முடிவு செய்திருந்தது.