விவசாயிகள் நிலத்தை உழுது பண்படுத்துவதற்கும் நீர் பாய்ச்சுவதற்கும் எரிபொருள் இன்றித் திண்டாடி வருகின்றனர். இதனால் ஏராளமான விவசாயிகள் சிறுபோகச் செய்கையைக் கைவிட்டுள்ளனர். இவர்களுக்கு வேண்டிய டீசலையும் மண்ணெண்ணையையும் தடையின்றிப் பெற்றுக்கொடுக்க அரச உயர் அதிகாரிகள் உடனடியாக ஆவன செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு முன்னுரிமை கொடுத்து எரிபொருள் வழங்காவிடின் உணவுத்தட்டுப்பாடு விரைவில் உக்கிரமடையும் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார்.
விவசாயிகள் எரிபொருட்களைப் பெறுவதிலுள்ள இடர்பாடுகள் தொடர்பாக பொ. ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில்-
அரசின் தவறான நிதித் திட்டமிடுதலினாலும் தவறான விவசாயக் கொள்கையினாலும் நாடு உணவு உற்பத்தியில் வரலாற்றில் என்றுமில்லாத அளவுக்கு மோசமான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.
கடந்த பெரும்போகம் எதிர்பார்த்த அறுவடையைத் தராத நிலையில், சிறுபோக விளைச்சலும் 50 வீதமாகக் குறைவடையும் அபாயம் நேர்ந்துள்ளது. உணவுத் தானியங்களின் இறக்குமதிக்கும் அரச கருவூலத்தில் பணம் இல்லாததால் நாடு மிகப்பெரும் உணவுப் பஞ்சத்தை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது.
நாடு பட்டினியை எதிர்நோக்கியுள்ள நிலையிலுங்கூட உணவுற்பத்தியில் அரசு காத்திரமான நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளவில்லை.
இதுவரையில் சிறுபோகச் செய்கை மேற்கொள்ளப்படாத நிலங்களில் குறுகிய காலப் பயிர்களான சிறுதானியங்களினதும் அவரை இனப் பயிர்களினதும் செய்கையை ஊக்குவிப்பது அவசியமாகும். இதற்கு வேண்டிய விதைகள் கையிருப்பில் இருக்கின்றபோதும் உழவுக்கும் இறைப்புக்கும் வேண்டிய எரிபொருட்களை விவசாயிகளுக்கு வழங்குவதற்கு அரசு இதுவரையில் முன்னுரிமை வழங்கவில்லை.
உணவுற்பத்தியை ஓர் அவசர காலச் செயற்பாடாகக் கருதி விவசாயிகளுக்குத் தடையின்றி எரிபொருள் கிடைக்க வழி செய்யவேண்டும். இதற்கு மாவட்டச் செயலர்களும், பிரதேச செயலர்களும் கமநல அபிவிருத்தித் திணைக்கள அதிகாரிகளும் தாமதமின்றி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அரசியல்வாதிகளும் இதற்கான அழுத்தங்களைக் கொடுக்க முன்வரவேண்டும். தவறின் உணவுத்தட்டுப்பாடு மென்மேலும் உக்கிரமடைவதோடு பட்டினிச் சாவுகள் நேர்வதும் தவிர்க்க முடியாததாகிவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.