தனது முன்னாள் மனைவி ஆம்பர் ஹேர்ட் மீது பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி டெப் தொடர்ந்த அவதூறு வழக்கில் அவருக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளது.
‘ஜாக் ஸ்பாரோ’ ஜானி டெப். ‘பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன்’ சீரிஸ் படங்களில் ‘ஜாக் ஸ்பாரோ’ என்ற கதாபாத்திரம் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களைச் சேர்த்த ஜானி டெப், 50 வயதுக்கு மேல் தன்னைவிட 25 வயது குறைவாக இருந்த அமெரிக்க நடிகை ஆம்பர் ஹேர்ட் மீது காதல் வயப்பட்டு 2015 இல் அவரை கரம்பிடித்தார். 15 மாதங்களில் இருவரும் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிந்தது பரஸ்பரம் விவாகரத்து பெற்றனர்.
இதன்பின் 2018இல் ‘வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுதினார் ஆம்பர் ஹேர்ட். பெண்கள் சந்திக்கும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான அந்தக் கட்டுரையில் ஜானியின் பெயரை குறிப்பிடாமல், அவர் சொன்ன விஷயங்கள் ஹாலிவுட் உலகை அதிரவைத்தது.
கட்டுரை வெளியானதுமே ஜானியின் ஹாலிவுட் சாம்ராஜ்யம் கட்டம் கட்டப்பட்டது. பல படங்கள் அவரின் கையை விட்டுச் சென்றன. ஃபென்டாஸ்டிக் பீஸ்ட்ஸ்’ படம் மட்டுமல்ல, ஜானியை ‘ஜாக் ஸ்பாரோ’வாக உலகம் முழுவதும் கொண்டு சேர்த்த ’பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்’ படத்திலிருந்தும் ஜானி நீக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதன்பின் கடந்த 2018இல் ஜானி டெப், ஆம்பர் மீது கட்டுரைக்கு குற்றம்சாட்டி அவதூறாக 50 மில்லியன் டொலர் நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடுத்தார். தனது சினிமா வாழ்க்கையை ஆம்பர் சிதைத்து வருவதாக ஜானி தொடர்ந்த வழக்குதான் ஹாலிவுட் திரையுலகில் கடந்த சில வாரங்களாக ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறது.
அவதூறு வழக்கு மூன்று ஆண்டுகள் முன்பு தொடங்கினாலும், கடந்த 6 வாரங்களாக வழக்கின் விசாரணை வர்ஜீனியாவின் ஃபேர்ஃபாக்ஸ் கவுண்டி சர்க்யூட் நீதிமன்றத்தின் நடுவர் மன்றத்தில் நடந்து வருகிறது.
இதன் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜானி டெப்புக்கு ஆதரவாக தீர்ப்பு கிடைத்துள்ளது. தீர்ப்பு வாசிக்கும் நிகழ்வில் ஜானி கலந்துகொள்ளவில்லை. ஆம்பர் தரப்பு இதற்கு ஆட்சேபம் தெரிவித்தனர். எனினும், இந்த வழக்கில் ஜானி டெப் அவதூறுக்கு ஆளானதை நிரூபிக்க முடிந்தது என தீர்ப்பு வழங்கப்பட்டது.
மேலும், ஆம்பர் 10 மில்லியன் டொலர் இழப்பீட்டு தொகையகாவும், 5 மில்லியன் டொலரை தண்டனைக்குரிய இழப்பீட்டு தொகையகாவும் வழங்க வேண்டும் எனவும் அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. வழக்கு செலவுகள் உள்ளிட்டவை போக, 10.35 மில்லியன் டொலர் ஜானிக்கு கிடைக்கும்.
தீர்ப்பின் பின் கருத்து தெரிவித்த ஆம்பர், “ எனது இதயம் உடைந்து விட்டது. வெளிப்படையாக பேசும் ஒரு பெண்ணை பகிரங்கமாக அவமானப்படுத்தவும் முடியும் என்பது நிரூபணமாகியுள்ளது. இந்த வழக்கில் நான் தோற்றது வருத்தமாக உள்ளது. ஆனால் ஒரு அமெரிக்கன் என்ற முறையில் சுதந்திரமாகவும் வெளிப்படையாகவும் பேசும் உரிமையை நான் இழந்து விட்டதாக தோன்றுவது எனக்கு இன்னும் வருத்தமாக உள்ளது“
இன்று நான் அனுபவிக்கும் ஏமாற்றம் வார்த்தைகளால் சொல்ல முடியாதது. என் முன்னாள் கணவரின் விகிதாசார சக்தி, செல்வாக்கு மற்றும் அலைக்கழிப்பு ஆகியவற்றிற்கு எதிராக நிற்கும் மலையளவு சான்றுகள் இன்னும் போதுமானதாக இல்லை என்று நான் மனம் உடைந்தேன்.
இந்த தீர்ப்பு மற்ற பெண்களுக்கு என்ன அர்த்தம் என்று நான் இன்னும் ஏமாற்றமடைகிறேன். இது ஒரு பின்னடைவு… பெண்களுக்கு எதிரான வன்முறையை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை இது பின்னுக்குத் தள்ளுகிறது“ என்றார்.
இந்த தீர்ப்பை ஜானியின் ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். என்றாலும், ஜானியின் மிகப்பெரிய புகழ், தீர்ப்பை வழங்கிய நீதிபதிகளில் செல்வாக்கு செலுத்தியதா என்ற கலகக்குரல்களும் எழுந்து கொண்டிருக்கின்றன.