25 C
Jaffna
January 19, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

யாழ் நூலகம் எரிப்பு: 41 ஆண்டுகள் கடந்தது!

தெற்காசியாவின் அறிவுக் களஞ்சியமாக போற்றப்பட்ட யாழ்பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன்  (1) 41 ஆண்டுகள் நிறைவடைகிறது.

ஜே.ஆர்.ஜெயவர்தனவின் ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில் திட்டமிட்டு நடத்தப்பட்ட இச் சம்பவமானது தமிழ் மக்களின் அடையாளம், அறிவு மற்றும் பண்பாடு போன்றவற்றை இல்லாதொழிக்கும் தமிழ் இன அழிப்பின் ஒரு அடையாளமாகவே தமிழ் மக்கள் கருதுகிறார்கள்.

இந்த நூலகஎரிப்பு வன்முறை கும்பலில் அப்போதைய அமைச்சர் காமினி திசாநாயக்கா, சிறில் மத்தியூ உட்பட வேறு பல அப்போதைய சிங்கள அரசியல் தலைவர்கள் அடங்கியிருந்தனர்

இந்நூலக அழிப்பின் போது பல நூற்றாண்டு பழமைவாய்ந்த தமிழ், ஆங்கில மொழிகளிலான 97,000 இற்கும் மேற்பட்ட நூல்களும், அரிய ஓலைச்சுவடிகளும் அழிந்து போயின.

கிடைப்பதற்கு அரிதான ஐசாக் தம்பையா நன்கொடை கொடுத்த இலக்கியம், சமயம், மொழியியல் தத்துவம் தொடர்பாக சுமார் 6000 நூல்களும், இந்திய வர்த்தகர் ஒருவரால் கொடுக்கப்பட்ட மகாத்மா காந்தியின் சத்தியசோதனை, 1672 ஆம் ஆண்டில் பிலிப்பஸ் பால்டியார் என்பவர் எழுதிய டச்சு ஆட்சியில் இலங்கை என்னும் நூல், 1660 ஆம் ஆண்டில் கண்டி மன்னரால் சிறைபிடிக்கப்பட்டவேளை றொபேட் நொக்ஸ் என்பவர் எழுதிய இலங்கையராவார் என்னும் நூல் உள்ளிட்ட நூல்கள் அழிக்கப்பட்டன.

1585 ஆம் ஆண்டில் கத்தோலிக்க மதத்தலைவர்களால் தமிழில் எழுதப்பட்ட நூல், சேர் பொன்னம்பலம் இராமநாதன் எழுதிய பகவத்கீதை விளக்கம், சித்தாந்தம், செந்தமிழ் இலக்கிய நூல்கள், திருமதி இராமநாதன் அம்மையார் எழுதிய இராமாயாண மொழிபெயர்ப்பு, மகாகவி பாரதியாரின் நண்பரான நெல்லையப்பன் எழுதிய நூல்கள், கடலைக்குடி நடேச சாஸ்திரியார் எழுதிய சோதிட சாஸ்திர நூல்கள், வானசாஸ்த்திரம் சம்பந்தமான நூல்கள், சித்தவைத்திய வாசகங்கள் அடங்கலான ஏட்டுச்சுவடிகள் ஆகியவை அழிந்தன.

மேலும், முத்துத்தம்பிபிள்ளை ஏழுதிய அபிதானகோசம், சிங்காரவேலு முதலியார் எழுதிய அபிதான சிந்தாமணி, முதலியார் இராசநாயகம் எழுதிய புராதன யாழ்ப்பாணம், சுவாமி ஞானப்பிரகாசம், முத்துத்தம்பிபிள்ளை எழுதிய யாழ்ப்பாணம் பற்றிய நூல்கள், கல்லடி வேலன் என்று அழைக்கப்பெற்ற கே.வேலுப்பிள்ளை இயற்றிய யாழ்ப்பாண வைபவகௌமுகி, சிற்பக்கலை பற்றிய நூல்கள், தனிநாயக அடிகளார் பதிப்பித்து வெளியிடப்பட்ட”தமிழ் கலாசாரம்” எனும் ஆங்கில சஞ்சிகை, இராசையனார், வன்னியசிங்கம், கதிரவேற்பிள்ளை, ஆனந்தகுமாரசாமி மற்றும் முதலியார் குலசபாநாதன் சேகரித்த நூல்கள், மற்றும் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட கையெழுத்து பிரதிகளும் அழிவடைந்தன.

இந்நூலகத்தை இலங்கையில் மட்டுமல்ல இந்தியாவின் தமிழ்நாடு உட்பட பல பாகங்களிலிருந்தும் தேடிச் சென்று பயன்படுத்தியிருந்தனர்.

நடந்தது என்ன?

யாழ் நூலகம் எரிக்கப்பட்ட சமயத்தில் யாழ் மாநகரசபை ஆணையாளராக பணியாற்றிய, தற்போதைய வடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் நடந்த சம்பவத்தை பின்வருமாறு விபரித்தார்-

அந் நூலகம் 1981 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1 ஆம் திகதி மாவட்ட சபை தேர்தல் கால வன்முறையின் போது எரிக்கப்பட்டது. இலங்கை அரசின் காவல் துறையினரும், அவர்களுடன் இணைந்த கட்டாக்காலிகளும் இணைந்து தமிழ் தேசியத்தின் பொக்கிஷமான நூலகத்தை எரித்தார்கள். இச்சம்பவம் நடைபெற்று 37 வருடங்கள் கடந்துவிட்டன.

அப்போது நடைபெற்ற அராஜகங்களை நேரடியாக நான் பார்த்தவன். அந்த வகையில் நூலக எரிப்பின் நேரடி சாட்சியாக நான் உள்ளேன்.

மாவட்ட சபை தேர்தலுக்காக அன்று யாழில் கூடியிருந்த அமைச்சர்கள் இங்கு ஜக்கிய தேசிய கட்சியின் ஆட்சியை கொண்டுவர வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தனர். அந்த தேர்தல் முடிவுகளை மாற்றி அமைக்க வேண்டும் என்ற அவர்களின் செயற்பாட்டை துணிந்து எதிர்த்து நின்ற அரச அதிபர் யோகேந்திரா துரைசுவாமியினால் அவர்களின் சதி முயற்சி முறியடிக்கப்பட்டது.

இதனால் அன்று துரையப்பா விளையாட்டரங்கில் நிலை கொண்டிருந்த காவல்துறையினரும், அவர்களுடன் இணைந்து சிலரும் நூலகத்தை தீக்கிரையாக்கினர்.

நூலகம் எரிக்கப்படும் போது எனக்கு முதலில் திருமதி யோகேந்திரா துரைசுவாமி தகவல் தந்திருந்தார். தகவல் கிடைத்ததும் என்னுடைய வாகனத்தை செலுத்திக் கொண்டு புறப்பட்டேன். வேம்படி சந்தியை அண்மித்த போது பொலிஸார் தடுத்து நிறுத்தினார்கள். மேற்கொண்டு செல்ல வேண்டாம் என்று அச்சுறுத்தினார்கள்.

காவல்துறையின் தடையினை மீறி சப்பல் வீதியை அடைந்த போது அங்கு நின்ற காவல்துறையினர் என்னையும், வாகனத்தையும் சுற்றி நின்று முன்னோக்கிச் செல்லவிடாது தடுத்து நிறுத்தினார்கள்.

இதனையும் மீறி சென்றால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அச்சுறுத்தி, துப்பாக்கியின் பிடியால் வாகனத்தின் மீது குத்தி என்னை மேலும் அச்சுறுத்தினார்கள்.

தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில் சப்பல் வீதியில் நின்று நேசித்து வளர்த்த தமிழ் மக்களின் கலாசார சின்னமாக இருந்த நூலகம் எரிவதை நேரடியாக பார்த்தேன். இந்த வன்முறையை அரசாங்கம்தான் செய்தது என்பதை தெளிவாக தெரிந்து கொண்டேன்.

அன்று 1981 ஜூன் முதலாம் திகதி காலை 5 மணியளவில் எரிந்த நூலகத்திற்கு சென்ற போது அமிர்தலிங்கம் உள்ளிட்டவர்கள் அங்கு நின்றார்கள்.

அங்கு சென்ற பார்த்த போது நூலகத்தில் இருந்து 97 ஆயிரம் புத்தகங்கள் எரிந்து சாம்பலாகி கிடந்தது. ஆனந்தகுமாரசாமியின் பழமைவாயந்த ஏட்டுச் சுவடிகளும் எரிந்து சாம்பலாகிக் கிடந்தது.

நூலக எரிப்பு என்பது கலாசார, கல்வி படுகொலையாகும். இது தமிழ் இனத்தை அச்சுறுத்துகின்ற படுகொலை நிகழ்வாகவே பார்க்கின்றேன்.

மீண்டும் அந்த நூலகத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்று முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக பல இடங்களில் நிதி சேகரிக்கப்பட்டன.

எரிக்கப்பட்ட நூலகத்தின் முன்பகுதியை நினைவுச் சின்னமாக பேணிக் கொண்டு நூலகத்தின் மேற்குப் பகுதியை புதிதாக நிர்மானித்து 1984 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 4 ஆம் திகதி பல்வேறு அச்சுறுத்தலுக்கு மத்தியல் புதிதாக நிர்மானிக்கப்பட்ட நூலக பகுதியை அமரர் அமிர்தலிங்கம் ஊடாக நான் திறந்து வைத்திருந்தேன்.

இதன் பின்னர் யுத்தம் காரணமாகவும் நூலகம் மீண்டும் சிதைக்கப்பட்டது. சிதைக்கப்பட்ட நூலகத்தினை புனரமைப்புச் செய்வதற்கு அதன் பின் வந்த அரசாங்கங்கள் முனைப்புக் காட்டியிருந்தன. இதனால் நூலக எரிப்பினை நினைவு கூறும் வகையில் எங்களால் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த நூலகத்தின் முன் பகுதி முழுமையாக புனரமைக்கப்பட்டு, நூலக எரிப்பின் சான்றும் அரசாங்கத்தால் திட்டமிட்டு இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட பின்னர் நவீனத்துவத்துடன் தற்போது இயங்கி வருகின்றது. குறிப்பாக கணினி உட்பட பல்வேறு வசதி வாய்ப்புக்கள் அங்கு உள்ளது. இருந்த போதும் நாங்கள் இழந்த தமிழ் மக்களின் ஓலைச் சுவடிகள் உட்பட பல பொக்கிஷங்களை மீண்டும் பெற்றுக் கொள்ள முடியாத நிலையிலேதான் இருக்கின்றோம்.

இது ஒரு காலத்தினுடைய கலாசார படுகொலையின் சுவடாகவே யாழ் பொது நூலக எரிப்பினை பார்க்கின்றேன் என்றார்.

யாழ் நூலக வரலாறு

யாழ் பொது நூலகம் 1933ஆம் ஆண்டு முதன் முதலில் மு.செல்லப்பா என்ற தனி நபரால் ஆஸ்பத்திரி வீதியில் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக வளர்ச்சி அடைந்து தற்போது உள்ள கட்டடத்தில் 1959ஆம் ஆண்டு அப்போதைய யாழ் மாநகர முதல்வர் அல்பிரட் துரையாப்பாவினால் திறந்துவைக்கப்பட்டது.

1941ஆம் ஆண்டில் இருந்து யாழ் மாநகரசபையின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வருகிறது.

1981 ஆம் ஆண்டு நூலகம் எரிக்கப்பட்ட போது 97 ஆயிரம் புத்தகங்களும், பழமைவாய்ந்த ஓலைச்சுவடிகளும், தனிநபர்களின் சேமிப்பு புத்தகங்களும் முற்று முழுதாக அழிவடைந்தன.

பின்னர் 2004 ஆம் ஆண்டு மீண்டும் புனரமைக்கப்பட்டு நூலகம் திறந்துவைக்கப்பட்டது. தற்போது ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களும், தனிநபர்களால் அன்பளிப்புச் செய்யப்பட்ட ஓலைச்சுவடிகளும் உள்ளன.

தாவீது அடிகள்

யாழ்.பத்திரியார் கல்லூரியின் மேல்மாடியில் ஓர் அறையில் தங்கி இருந் சிங்கராயர் தாவீது அடிகள், 1981 மே 31 ஜூன் 1 நள்ளிரவில் யாழ்ப்பாணப் பொது நூலகம் எரியூட்டப்பட்ட செய்தியைக் கேள்வியுற்ற பின் அதிர்ச்சியுடன் உறக்கத்திற்குச் சென்றார்.

அடுத்தநாள் விடியற்காலை காலமானார். நூலகம் எரியூட்டப்பட்ட செய்தியைக் கேட்ட அதிர்ச்சியினாலேயே அவர் உயிர் நீத்தார் என்று சுட்டிக்காட்டப்பட்டது .

நினைவு நிகழ்வு

யாழ் மாநகரசபையின் ஏற்பாட்டில் இன்று காலை 9 மணிக்கு யாழ் பொது நூலகத்தில் நினைவு நிகழ்வு இடம்பெறவுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அனுரவின் சீனப்பயணம்: 10 பில்லியன் டொலர் மதிப்பு முதலீடுகள் இலங்கைக்கு கிடைக்கும் வாய்ப்பு!

Pagetamil

மின் கட்டணம் 20 சதவீதத்தால் குறைப்பு!

east tamil

UPDATE: மன்னார் நீதிமன்றத்தின் முன் துப்பாக்கிச்சூடு; 2 பேர் உயிரிழப்பு!

Pagetamil

மன்னார் நீதிமன்ற வாயிலில் துப்பாக்கிச்சூடு; 3 பேர் காயம்: உயிலங்குளம் இரட்டைக்கொலைக்கு பழிக்குப்பழியா?

Pagetamil

இஸ்ரேல் -ஹமாஸ் போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டது: ஆறு வார காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் விவரங்கள்!

Pagetamil

Leave a Comment