ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் கோட்டாபய ராஜபக்ஷவினால் விடுவிக்கப்பட்ட துமிந்த சில்வா கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை உடனடியாக கைது செய்யுமாறு உயர் நீதிமன்றம் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு நேற்று (31) உத்தரவிட்டுள்ளது.
ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அவரை விடுவிப்பதற்கான தீர்மானத்தை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தி இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து இது இடம்பெற்றுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் வெளிநாட்டுப் பயணத்திற்கு இடைக்காலத் தடை விதித்து மற்றும் கடவுச்சீட்டை நீதிமன்றில் ஒப்படைப்பதற்கும் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, அவரது தாயார் சுமனா பிரேமச்சந்திர உள்ளிட்ட மூவரினால் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்த போதே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இந்த மனு நீதியரசர்களான யசந்த கோதாகொட, பிரீத்தி பத்மன் சூரசேன மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.