கல்விப் பொதுதராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவியொருவர் பரீட்சை மண்டபத்தில் வைத்தே பரீட்சை மேற்பார்வையாளரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார்.
இந்த அதிர்ச்சி சம்பவம் கடந்த 25ஆம் திகதி நடைபெற்றுள்ளது.
அனுராதபுரம் மாவட்டத்தில், ஹிடோகம பொலிஸ் பிரிவில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
கடந்த 25ஆம் திகதி நடைபெற்ற க.பொ.த சாதாரண தர பரீட்சையின் வரலாற்று பட பரீட்சைக்கு தோற்றிய மாணவியொருவரே பரீட்சை மண்டபத்தில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார்.
மாணவிக்கு பரீட்சை எழுத உதவி செய்வதாக கூறி பரீட்சை எழுதிக் கொண்டிருந்த மாணவியின் முகத்தில் முத்தமிட்ட கண்காணிப்பாளர், மாணவியின் மார்பைத் தொட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து அன்றே ஆசிரியர் ஒருவரிடம் மாணவி புகார் அளித்துள்ளார்
எனினும், நடவடிக்கை எடுக்கப்படாததையடுத்து, 26ஆம் திகதி தனது தாயாருடன் சென்று, ஹிடோகம பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து கண்காணிப்பாளர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பரீட்சைக் கண்காணிப்பாளரான ஆசிரியர், சம்பவத்தை மூடி மறைக்க மாணவி தரப்பிற்கு பணம் வழங்க முயன்றதாகவும் தெரிய வருகிறது.
பாதிக்கப்பட்ட மாணவி க.பொ.த உயரதரத்தில் கல்வி கற்று வருகிறர். சாதாரண தரத்தில் சித்தியடையாத வரலாற்று பாடத்தில் இந்த வருடம் தோற்றியுள்ளார்.
சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் முறைப்பாடு அல்லது சந்தேகம் அல்லது தகவல் இருந்தால், உடனடியாக 1929 இல் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்குத் அறிவியுங்கள்.