கேரளாவில் அழகு நிலையம் முன்பு நின்று கருப்பு நிறமான பெண் செல்போன் பேசியதால் தனது கடையின் அழகு கெட்டுவிட்டதாக கூறி மலைவாழ் பெண்ணை, அவரது மகள் கண் முன்பே அழகு நிலைய பெண் உரிமையாளர் செருப்பால் அடித்து உதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த சாஸ்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மீனா (39). இவர் அதே பகுதியில் பெண்களுக்கான பியூட்டி பார்லர் ஒன்றை நடத்தி வருகிறார்.
மருதங்குழி மலைகிராமத்தை சேர்ந்த சேபனா (33) என்ற பட்டதாரி பெண் கடந்த வியாழக்கிழமை தனது நகையை அடகு வைப்பதற்காக தனது மகளுடன் சாஸ்தமங்கலம் பகுதிக்கு வியாழக்கிழமை சென்றுள்ளார். அங்கு பிணைக்கு ஒருவரை கேட்டதால், வேறு வங்கிக்கு நகையை அடகு வைக்க சென்றுள்ளார்.
வங்கிக்கு முன்பாக இருந்த மீனாவுக்கு சொந்தமான பியூட்டி பார்லர் முன்பு உள்ள பிளாட்பாரத்தில் நடந்து சென்ற போது சேபனாவின் செல்போனில் அழைப்பு வந்துள்ளது.
அங்கு நின்று செல்போனில் பேசிக் கொண்டு இருந்துள்ளார். இதைக் கடைக்குள் இருந்து பார்த்த மீனா, கருப்பு நிற பெண் தனது பார்லர் முன்பு நின்று செல்போன் பேசுவதால், கடையின் அழகு கெட்டுப்போவதாக கருதி மலை கிராம பெண்ணான சேபனாவிடம் வாக்குவாதம் செய்து தாக்கியதாக கூறப்படுகிறது.
எந்த தவறும் செய்யாத தான் எதற்காக தாக்கப்படுகிறோம் என்று தெரியாமல் சேபனா பதறிபோன நிலையில் , அடங்காத மீனா, அவரது துப்பட்டாவை பிடித்து கீழே இழுத்து போட்டதுடன் சேபனாவையும் கீழே தள்ளிவிட்டார்.
தனது தாயை காப்பாற்றும்படி 7 வயதான சிறுமி உதவி கேட்டு கதறினார். அந்த பகுதியிலிருந்த யாரும் உதவவில்லை.
மீனாவோ, மலைகிராம பெண்ணை தனது காலில் கிடந்த செருப்பை கழட்டி தாக்கி அங்கிருந்து விரட்டியதாக கூறப்படுகிறது.
இதை வீடியோ எடுத்தவர்களை மீனாவுடன் வந்த இளைஞன் தாக்கினார். எனினும், பலர் வீடியோ எடுத்ததால் அந்த காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவியது.
சோபனா தனது கடையில் நகை திருட வந்ததாக முதலில் மீனா உருட்டினார்.
சோபானா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்ற போதும், பொலிசார் முதலில் முறைப்பாடு பதியவில்லை.
கேரள முக்கிய அரசியல்வாதிகள், பொலிஸ் அதிகாரிகளின் மனைவியர் மீனாவின் பியூட்டி பார்லர் வாடிக்கையாளர்கள் என்பதே இதன் காரணம்.
எனினும், சமூக ஊடக கொந்தளிப்பையடுத்து மீனாவை பொலிசார் கைது செய்து, பொலிஸ் பிணையில் நேற்று விடுவித்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்யவில்லை.
இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தியுள்ள கேரள மனித உரிமைகள் ஆணைக்குழு, 4 வாரங்களில் அறிக்கை சமர்ப்பிக்க பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளது.