தனது வீடுகள் அழிக்கப்பட்ட அதிர்ச்சியில் இருந்து இன்னமும் மீளவில்லையென மூத்த வெள்ளித்திரை நடிகையாக இருந்து அரசியல்வாதியாக மாறிய கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
நாவலவில் உள்ள அவரது வீடும், பெந்தோட்டையிலுள்ள பூர்வீக இல்லமும் அழிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
”காலி முகத்திடலில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு எதிராக நான் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மே 9 அன்று அலரிமாளிகையில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஆதரவாளர்களை அழைத்து வரவோ அல்லது கூட்டத்தில் பங்கேற்கவோ நான் பேருந்துகளை ஏற்பாடு செய்யவில்லை, ஆனால் நான் இலக்காகிவிட்டேன்” என்று கீதா குமாரசிங்க ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்தார்.
விருது பெற்ற திரைப்பட நடிகையான அவர், நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக தனது திரைப்பட வாழ்க்கையில் பெற்ற பல பொக்கிஷமான விருதுகள் கும்பலால் அழிக்கப்பட்டதாகக் கூறினார்.
“மே 9ஆம் திகதி வன்முறை ஆரம்பித்து, பெந்தோட்டையில் உள்ள எனது வீடு தாக்கப்பட்டதன் பின்னர், நாவலவில் உள்ள எனது இல்லத்திற்கும் கும்பல் வரக்கூடும் என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டது. அடுத்த நாள் மாலை நான் படுக்கையில் படுத்திருந்தேன். அரசியலில் நீடிப்பது பயனுள்ளதா என்று சிந்தித்தபடியிருந்தேன். பொழுது சாய்ந்து சிறிது நேரத்துக்குப் பிறகு மின்சாரம் துண்டிக்கப்பட்டது, திடீரென்று பலத்த சத்தம் கேட்டது, கும்பல் உள்ளே நுழைந்ததை நான் அறிந்தேன்” என்று அவர் கூறினார்.
“எனது உதவியாளர்களில் ஒருவர் என்னைப் பாதுகாப்பாக ஒரு கைவிடப்பட்ட நிலத்திற்கு இழுத்துச் சென்றார், அங்கு காவல்துறை வரும் வரை நான் இரண்டு மணி நேரம் தங்கினேன். நான் அதிர்ச்சியில் இருந்தேன்,” என்றார்.
“காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் தாக்கப்பட்டதால், அவர்களைத் தாக்கியவர்கள் மீது வெறுப்பு ஏற்பட்டதாகவும், அரசியல்வாதிகளின் வீடுகள் தாக்கப்பட்டதாகவும் சிலர் தாக்குதல்களை நியாயப்படுத்த முயற்சிக்கின்றனர். அது சரியான நியாயம் அல்ல. சட்டம் ஒழுங்கு அதன் இடத்தை இழந்துவிட்டது” என்று அவர் கூறினார்.
அநீதிக்கு எதிராக நிற்க விரும்பியதால் தான் அரசியலுக்கு வந்ததாக கீதா குமாரசிங்க கூறினார். “இது ஒரு போராட்டம்.என் சொந்த வழி. பாராளுமன்றத்தில் பெண்களை பிரதிநிதித்துவப்படுத்தவும், தற்போதைய பாராளுமன்றத்தில் வெளியில் இருந்து வந்த ஒரே பெண்ணாகவும் என்னால் இருக்க முடிந்தது.
சினிமா துறையை தியாகம் செய்துவிட்டு அரசியலுக்கு வந்தேன். மக்கள் நலனுக்கான போராட்டத்தில் கலைஞர் எப்போதும் பங்கு கொள்ள வேண்டும். அரசியலுக்கு வந்தபோது சினிமா மீதான ஈடுபாட்டை முழுமையாக கைவிட வேண்டியதாயிற்று.
ஆனால் நான் ஒரு அரசியல்வாதியாக எனது பாத்திரத்தில் தோல்வியடைந்தேன், ஏனென்றால் அரசாங்கம் அதன் பங்கைப் புரிந்து கொள்ளவில்லை. ஆனால் நான் ஆற்ற வேண்டிய பாத்திரத்தை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால், அரசியலை ஒருபோதும் கைவிட மாட்டேன். நான் சுயமாக உருவாக்கப்பட்ட பெண் மற்றும் வலிமையானவள். எனக்கு ஒரு சமூகப் பொறுப்பு இருக்கிறது,” என்றார்.
“கலைத்துறைக்கான இராஜாங்க அமைச்சராக நான் நியமிக்கப்பட்டபோது நான் மகிழ்ச்சியடைந்தேன். கலைத்துறையைச் சேர்ந்த ஒருவர் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டது அதுவே முதல் முறை. நான் மிகவும் திட்டமிட்டேன். அந்த நம்பிக்கைகள் இரண்டு வாரங்களில் சிதைந்துவிட்டன” என்று கீதா குமாரசிங்க மேலும் கூறினார்.
தனது அரசியல் போராட்டத்தை தொடரப்போவதாகவும், ஆனால் மீண்டும் சினிமா துறைக்கு திரும்ப திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.