அவுஸ்திரேலியாவில் அகதிக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் நாடு கடத்தும் அபாயத்தை எதிர்கொண்டிருந்த இலங்கையை சேர்ந்த நடேசன் – பிரியா தம்பதியினர் அவுஸ்திரேலியாவில் வசிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இடைக்கால உள்துறை அமைச்சர் ஜிம் சால்மர்ஸின் தலையீட்டைத் தொடர்ந்து நடேசன் குடும்பத்தினர் குயின்ஸ்லாந்தின் பிலோலா நகருக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.
தற்போது பேர்த்தில் சமூகத் தடுப்புக்காவலில் உள்ள இந்தக் குடும்பத்தை குயின்ஸ்லாந்தில் உள்ள அவர்களது வீட்டிற்கு அழைத்து வருவதற்கு தான் தலையீட்டதாக இடைக்கால உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.
அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி பல வருடங்களாக இந்த குடும்பம் சட்டப் போராட்டம் நடத்தி வந்தது.
தற்போது அவர்களுக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்கவில்லை என்றாலும் – பிரிட்ஜிங் விசாவில் அவர்கள் குயின்ஸ்லாந்து வீட்டிற்குத் திரும்ப அனுமதிக்கப்படுகிறார்கள்.
“இன்று, உள்துறைக்கான இடைக்கால அமைச்சராக, முருகப்பன் குடும்பத்தின் வழக்கில் தலையிட, இடம்பெயர்தல் சட்டம் 1958 இன் பிரிவு 195A இன் கீழ் எனது அதிகாரத்தைப் பயன்படுத்தினேன்,” என்று சால்மர்ஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
“எனது தலையீட்டின் விளைவு, குடும்பம் பிலோலாவுக்குத் திரும்புவதற்கு உதவுகிறது, அங்கு அவர்கள் ஆஸ்திரேலிய சட்டத்தின்படி, குடியேற்ற நிலையைத் தீர்ப்பதற்கு வேலை செய்யும் போது, பிரிட்ஜிங் விசாவில் சமூகத்தில் சட்டப்பூர்வமாக வசிக்க முடியும்.” என்றார்.
நாட்டிற்கு படகு மூலம் வரும் எந்தவொரு புகலிடக் கோரிக்கையாளரும் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும், அவுஸ்திரேலியாவில் மீள்குடியேற்றம் செய்யப்பட மாட்டார்கள் என்றும் சால்மர்ஸ் கூறினார்.
அவுஸ்திரேலியாவில் சில நாட்களின் முன் நடந்த தேர்தலில் தொழிற்கட்சி வெற்றியீட்டியது. தொழிற்கட்சி அகதிகள் விவகாரத்தில் சாதகமான நிலைப்பாட்டை கொண்டது. இதனால் தொழிற்கட்சி தேர்தலில் வென்றதும், இலங்கையிலிருந்து படகு மூலம் அவுஸ்திரேலியா சென்று இதுவரை அகதி அந்தஸ்து கிடைக்காத தமிழ் இளைஞர்கள் அங்குள்ள இந்து ஆலயமொன்றில் பொங்கல் பொங்கி, காவடியெடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.