கடந்த மே மாதம் 9ஆம் திகதி நிட்டம்புவ பிரதேசத்தில் இடம்பெற்ற அமைதியின்மையின் போது நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோர் உயிரிழந்தமை தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக 14 பேரை திட்டமிட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சந்தேகநபர்களில் ஒருவர் நிட்டம்புவ பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதான கட்டடத் தொழிலாளி எனவும் மற்றையவர் வரகாபொல பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய தனியார் நிறுவன ஊழியர் எனவும் அவர் கூறினார்.
சந்தேகநபர்கள் இருவரும் பாராளுமன்ற உறுப்பினரின் சாரதியை மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் கண்டுபிடித்துள்ளதாக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தல்துவ தெரிவித்தார்.
சந்தேகநபர்கள் இருவரும் சாரதியின் மனைவிக்கு சொந்தமான ATM அட்டையை பயன்படுத்தி 250,000 ரூபாவிற்கும் அதிகமான கையடக்க தொலைபேசி உட்பட பல்வேறு கொள்வனவுகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
குறிப்பிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த நிதியில் போதைப்பொருள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.




