ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிற முக்கிய பிரமுகர்கள் மீது செல்வாக்கை பயன்படுத்துவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை சூனியக்காரியென்றும், சோதிடர் என்றும் விதவிதமாக அழைக்கப்படும் ஞானாக்கா மறுத்துள்ளார்.
மே 9 அன்று தனது சொந்த வியர்வை, உழைப்பினால் கட்டியெழுப்பப்பட்ட அனைத்து சொத்துக்களும் இப்போது அழிக்கப்பட்டுவிட்டதாகக் கண்ணீருடன் கூறியுள்ளார்.
அநுராதபுரம், இசுருபுரத்தை சேர்ந்த ஞானாக்கா என அழைக்கப்படும் ஞானவதி ஜயசூரிய (66) அண்மை நாட்களில் சமூக ஊடகங்களிலும், மக்கள் மத்தியிலும் மிகப்பிரபலமாகினார்.
ஜனாதிபதி, இராணுவத்தளபதி உள்ளிட்ட பல பிரமுகர்களை அவர்தான் வழிநடத்துகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து பொதுமக்களின் கோபம் அவர் மீது திரும்பியது. அவரது வீட்டை தாக்க பல முறை பொதுமக்கள் முயன்றனர். இதையடுத்து, ஏராளம் இராணுவத்தினர், பொலிசார் குவிக்கப்பட்டு அவரது வீட்டுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது.
ஞானாக்கா காளியின் கோபத்திற்கு ஆளானவர் என்றும் சமூக ஊடகங்களில் குறிப்பிடப்பட்டது.
அவர் கொழும்பு ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சூனியம் மூலம் வழிநடத்த முயன்றதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை அவர் மறுத்துள்ளார். தான் புத்தரை வணங்குபவர் மற்றும் பௌத்த போதனைகளைப் பின்பற்றுபவர் என்று கூறினார்.
மேலும் அவர் அரசியல் அல்லது இராணுவ தரப்பினால் ஆதரவால் ஆதாயம் அடைந்தார் என்ற குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளார். “நான் வஞ்சகத்திலும் தந்திரத்திலும் ஈடுபடுவதில்லை’ என்றார்.
கடந்த 41 வருடங்களாக அநுராதபுரத்தில் சோதிடம் மற்றும் வழிபாடுகளில் ஈடுபடுபவராக பிரமலமடைந்தவ் ஞானாக்கா.
புனிதபூமி என்ற ஆலயத்தையும் நடத்தி வருகிறார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் பல அரசியல் பிரமுகர்கள் மீது அதிகாரத்தை பிரயோகிப்பதாக தவறாக குற்றம் சாட்டி, மே 9 இரவு தனது வீடு சூறையாடப்பட்டு எரிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம் விமான நிலைய வீதியிலிருந்து (கண்டி வீதி) நான்கு கிலோமீற்றர் தொலைவில் உள்ள இசுருபுரத்தில் ஞானாக்காவின் வீடு உள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டை ஆள்வதற்கான அறிவுறுத்தல்களை அவரால் வழங்கப்படுவதாக மக்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த ஞானா, ஜனாதிபதியுடன் அரசியல் பிரச்சினைகள் எதுவும் பேசப்படவில்லை. அனைத்தும் தனிப்பட்ட பிரச்சனைகளே என்று கூறினார்.
ஆனால், நிறைவேற்று ஜனாதிபதியின் தனிப்பட்ட விடயங்கள் பல அரசியல் விடயங்கள் அல்லவா என கேள்வியெழுப்பப்பட்ட போது, குடியாவில் (அவரது அறையில்) ஜனாதிபதி அல்லது வேறு எவருக்கும் வழங்கிய ஆசீர்வாதங்களையும் வழிகாட்டுதலையும் ‘தனிநபர் ஞானாக்காவால்’ நினைவில் கொள்ள முடியாது என்று கூறுகிறார்.
ஞானாக்கா என்பவர் ஒருவர் என்றாலும், அமானுஷ்ய சக்திகள் உடலில் இறங்கும் போது, சாதாரண ஞானாக்கா அல்ல, அவர் வேறுபட்டவர். அந்த சக்திகள் திரும்பி சென்ற பின்னர், அப்போது நடந்தவற்றை நினைவில் கொள்ள முடியாது என்றார்.
ஜனாதிபதியும் அவரது மனைவியும் சுமார் 12-13 வருடங்களுக்கு முன்னர் அவரது புனித பூமிக்கு வருகை தந்துள்ளனர். யுத்தம் முடிந்த காலம் அது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரண்டு முறை வந்துள்ளார். தற்போதைய ஜனாதிபதி வாராந்தம் வருகிறார் என்ற தகவலை மறுத்துள்ளார். அவரால் முடிந்த போதெல்லாம் வருவார், ஆனால் தற்போது பல மாதங்களாக வரவில்லை என்கிறார்.
ஜனாதிபதியின் குடும்ப உறுப்பினர்கள் புனிதபூமியில் புண்ணிய காரியங்கள் என குறிப்பிடும் எதிலும் ஈடுபடவில்லை, ஜனாதிபதி அங்கு அதிகாலையில் புனித நீரில் குளிக்கவில்லையென தெரிவித்து சமூக ஊடக தகவல்களை மறுத்துள்ளார்.
ஆனால் மருந்து கொடுப்பதில் உதவுவதாக கூறுகிறார்.
ஜனாதிபதியும், மனைவியும் இனினும் தன்னை பார்க்க வருவார்கள் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ஏனெனில் அவர்களிற்கு நன்றியுணர்வும் நெருக்கமான பிணைப்பும் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
விஐபிகளுக்காக வழிபாடுகளில் ஈடுபட ஹெலிகொப்டரில் அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை அவர் நிராகரித்துள்ளார்.
சபிக்கப்பட்ட தண்ணீரை காலி முகத்திடலில் உள்ள போராட்டக்காரர்களை கலைப்பதற்காக விநியோகிக்க அனுப்பப்பட்டதாக வெளியான தகவல்களையும் மறுத்தார்.
“நான் அந்த விஷயங்களைச் செய்யும் வகை இல்லை,” என்று தெரிவித்தார்.
ஸ்ரீ மஹா போதி மற்றும் ருவன்வெளிசேயாவிற்கு அருகாமையில் சந்த ஹிரு சேயா விகாரையை நிர்மாணிப்பதற்கு அரசாங்கத் தலைவர்களை தான் தூண்டவில்லை, அந்த விகாரையில் வைக்க எந்த மந்திர மருந்துகளையும் கொடுக்கவில்லை என்றார்.
இராணுவத்தில் பணிபுரியும் மற்றும் ஓய்வுபெற்ற ஜெனரல்கள் மற்றும் அவர்களது மனைவிகள் உட்பட இராணுவத்தின் உயர்மட்ட அதிகாரிகள் அடிக்கடி வருகை தந்ததாக ஞானாக்கா கூறுகிறார், ஆனால் இராணுவத்துடனான வேறு எந்த தொடர்புகளையும் மறுக்கிறார் – “அவர்கள் வருவதை என்னால் தடுக்க முடியாது,” என்று தெரிவித்தார்.
எனினும், அவரது வீடு, ஹொட்டல் கட்டுமானங்களிற்கு இராணுவத்தினரை பயன்படுத்தியதாக கூறும் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
மே 9 நடந்தது என்ன?
அன்று மாலை நடந்த சம்பவத்தை ஞானாக்கா விபரித்துள்ளார்.
ஞானாக்காவும் அவரது மகளும் அபயகிரியவில் இருந்தார்களாம். சமூக ஊடங்களில் உங்களை வெறித்தனமாக தாக்குகிறார்கள், ஏதாவது ஆபத்து நேரலாம், வீட்டிற்கு செல்ல வேண்டாம் என்று பலர் தொலைபேசியில் எச்சரித்தனர். இதனால் அவர்கள் வீட்டுக்கு செல்லவில்லை.
ஆனால் அவரது மகன் அனுருத்த (இங்கிலாந்தில் வசிக்கிறார், ஆனால் தற்போது இலங்கையில் இருக்கிறார்) மற்றும் அவரது மருமகன் பந்தக ஆகியோர், அவர்களைப் பாதுகாக்க வந்த சுமார் 20 நண்பர்களுடன் வீட்டில் இருந்தனர்.
ஞானாக்கா உடனடியாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவை அழைத்து, “தாக்குதலில் இருந்து காப்பாற்ற ஏதாவது உதவி செய்யுங்கள்” என கேட்டுள்ளார். இராணுவத்தளபதி அடிக்கடி ஞானாக்காவின் புனிதபூமிக்குச் செல்வதால் அவரை நன்கு தெரியும்.
10 பொலிசார், 250 ஆயுதமேந்திய இராணுவத்தினர் அங்கு வந்து இராணுவ வாகனங்களை தோட்டத்தில் நிறுத்தினர். மகன், மருமகன் மற்றும் நண்பர்களை உள்ளே இருக்கச் சொன்னார்கள்.
குடும்ப உறுப்பினர்கள் சிலர் முகக்கவசம் மற்றும் தலைக்கவசம் அணிந்தபடி, அடையாளம் தெரியாத வகையில் வெளியில் தங்கியிருந்து, அன்று இரவு சுமார் 8.30 மணி முதல் மறுநாள் அதிகாலை வரை நிலைமையை அவதானித்துக் கொண்டிருந்தனர். நிலைமைகளை உடனுக்குடன் ஞானாக்காவை அழைத்துக் தெரிவித்துக் கொண்டே இருந்தார்கள்.
ஒரு குழுவொன்று திரண்டு மற்ற அரசியல்வாதிகளின் வீடுகளுக்குத் தீவைத்துவிட்டு, சுமார் 100-150 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இரண்டு சிறிய வேன்களில் ஞானாக்காவின் வீட்டிற்கு வந்தனர். இராணுவத்தைப் பார்த்ததும், அவர்களில் பாதி பேர் சிதறி ஓடினர், ஆனால் மற்றவர்கள் வீட்டை சுற்றி வளைத்தனர், ஞானாக்கா மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களை குறிவைத்து ஆபாசமாக கத்தினர். அப்போது, 100 பேர் கொண்ட மற்றொரு குழு அவர்களுடன் சேர்ந்தபோது, சிலர் சுவரின் ஒரு மூலையை உடைக்கத் தொடங்கினர்.
நான்கு பேர் ஏணியை வைத்து வீட்டு மதிலை கடந்து தோட்டத்திற்குள் குதித்து, வீட்டிற்குள் நுழைந்தனர். அவர்களுடன் சேர்ந்து 25 பேர் ஊடுருவினர். அவர்கள் வீட்டை கொள்ளையடித்தனர். மற்றொரு கூட்டம் இராணுவத் தடையைத் தள்ளி உடைத்தது. தங்கம் முதல் அரிசி, மசாலா பொருட்கள், எரிவாயு சிலிண்டர்கள் வரையிலான பொருட்களை கொள்ளையிட்டு முச்சக்கர வண்டிகளில் கொண்டு சென்றனர்.
பின்னர் வீட்டை நொறுக்கி, தீ வைத்தனர். ஆனால் ஆலயத்தில் சிறு சேதத்தையும் ஏற்படுத்தவில்லை.
முதலில் ஞானாக்காவின் அறை தீவைக்கப்பட்டது. பின்னர் பஞ்சக மற்றும் நடிஷானியின் அறை தீ வைக்கப்பட்டது. மே 10 ஆம் திகதி அதிகாலை 2.30 மணி வரை இது நடந்து கொண்டிருந்தது. தீயை அணைப்பதைத் தடுக்க அவர்கள் தண்ணீர் மீட்டரையும் உடைத்தனர்.
பூந்தொட்டிகள் மற்றும் ஒரு கூண்டில் அடைக்கப்பட்ட கிளி கூட எடுக்கப்பட்டது. பெருமளவிலான படைவீரர்கள் நின்று கொண்டிருந்த நிலையில் இந்த சம்பவங்கள் நடந்தன.
வீடு எரிந்த பிறகும் ஞானாக்கா இன்னும் தன் வீட்டிற்கு திரும்பவில்லை என்றார்.
இப்படியொரு சம்பவம் நடக்கப் போகிறதென அவரது அமானுஷ்ய சக்திகளிற்கு தெரியவில்லையா என கேட்ட போது,
ஏற்கனவே குறிப்பிட்டதை போல, ஒரே உடல் இரண்டு வெவ்வேறு ஆளுமைகள் உள்ளதாக தெரிவித்தார்.
”ஞானாவில் உள்ள தனிநபருக்கு எந்த சந்தேகமும் ஏற்படவில்லை. ஆனால் என்னில் உள்ள அமானுஷ்ய சக்திக்கு அது தெரிந்தது. அதனால், இந்த வீட்டில் நீ தங்கக்கூடாது என உடலில் உள்ள ஞானாவிற்கு செய்தியை அனுப்பியது” என தெரிவித்துள்ளார்.
அதே ஞானாவிற்கு அமானுஷ்ய சக்தியிடம் இருந்து மற்றொரு செய்தியும் வந்ததாம். அதாவது, முந்தைய பிறவியில் செய்த பாவத்தை அவர் செலுத்த வேண்டியிருந்ததால் வருத்தப்பட வேண்டாம் என சொன்னதாம்.
வீட்டை தீயிட்டகுழு, அனுருத்த மற்றும் பஞ்சக ஆகியோருக்குச் சொந்தமான நெலும்குளத்தில் சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஏழு அறைகளைக் கொண்ட லேக் மொனார்க் ஹொட்டலுக்கு தீவைத்தனர்.
தாக்குதல் நடத்தியவர்களில் பெரும்பாலானோர் தங்களுக்குத் தெரியும் என்று குடும்பத்தினர் கூறுகின்றனர். அவர்கள் அனுராதபுரம் மாவட்டத்தில் நன்கு அறியப்பட்டவர்கள்.
அவர்களின் வீட்டில் இருந்த அடையாள அட்டைகள், பிறப்புச் சான்றிதழ்கள், பாஸ்போர்ட்கள், மடிக்கணினிகள் அனைத்தும் அழிந்துவிட்டதாக ஞானாக்கா கூறுகிறார். அன்று உடுத்தியிருந்த உடைகள் மட்டுமே அவரிடம் எஞ்சியுள்ளது என்றார்.
யார் இந்த ஞானாக்கா? எப்படி அமானுஷ்ய சக்தியைப் பெற்றார்?
ஞானாக்காவின் பூர்வீக இடம் இசுருபுரம். தந்தை நெல் விவசாயி.
தீபானி மகா வித்தியாலயத்தில் (இப்போது ஜனாதிபதி கல்லூரி) கற்று சாதாரண தர (OL) பரீட்சையில் சித்தியடைந்தார். ஆனால் 1970களின் இறுதியில் பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்து கொண்டார். அவரது காதலன் கே.ஏ. ஜயசூரியவின் குடும்பம் நுகேகொடையிலிருந்து இடம்பெயர்ந்து அனுராதபுரத்தில் தங்கியிருந்தது.
“நாங்கள் பாடசாலையில் படிக்கும் போது சந்தித்தோம்,” என்று காதல் நினைவை மீட்டினார்.
ஞானாக்கா திருமணத்தின் பின் தனது உயர்தரத்தை (AL) முடித்தார். ஆனால் ஒரு பாடத்தில் மட்டுமே தேர்ச்சி பெற்றார். அதன் பின் உதவியாளராக பணியாற்றத் தொடங்கினார், பின்னர் ஒரு தேர்வில் தேர்ச்சி பெற்றார். இதை தொடர்ந்து அநுராதபுரம் மருத்துவமனையில் தொலைபேசி ஒபரேட்டர் பதவியை பெற்றார்.
ஜெயசூர்யா வாழ்வாதாரத்திற்காக சிறிய ஒப்பந்த வேலைகளை மேற்கொண்டார், பின்னர் கல்வித்துறையில் கண்காணிப்பாளராக இருந்தார். விரைவில் இந்த தம்பதியருக்கு அனுருத்த நளின் குமார என்ற மகனும், நதிஷானி என்ற மகளும் பிறந்தனர். ஞானா இப்போது மூன்று பேருக்கு பாட்டி.
”எனது கணவர் ஏப்ரல் 14 (புத்தாண்டு), 1996 அன்று கொல்லப்பட்டார்,” என்று அவர் கூறுகிறார்.
அவர் பலருடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது அது அரசியல் உள்நோக்கத்துடன் கூடிய சண்டை நிகழ்ந்ததாக தெரிவித்தார். ஜெயசூரிய யூ.என்.பி ஆதரவாளர், ஸ்ரீ.ல.சு.க ஆதரவாளர்கள் அவரைக் கொன்றனர்’ என்றார்.
ஆனால், ஞானாக்காவின் கணவரின் மரணம் தொடர்பான வேறொரு தகவலும் உள்ளது.
அவரது கணவர் தனியாக ஆற்றில் குளிக்கச் சென்றார், அப்போது சுமார் 10 பேர் வந்து தகராறு செய்தனர். பின்னர் அவர் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் ஞானாக்கா ஒரு சாட்சியாக இருந்தார். கணவரின் உடலை அடையாளம் காட்டினார் என்ற தகவலும் உள்ளது.
விதவையாகிவிட்ட நிலையில், மருத்துவமனையில் டெலிபோன் ஒபரேட்டர் பணியை மட்டும் செய்து கொண்டு, பிள்ளைகளை வளர்ப்பதற்கும் படிக்க வைப்பதற்கும் கடினமாக உழைத்ததாக ஞானா கூறுகிறார். பமுனுவவிற்கு ரயிலில் வந்து, சிறிய லாபத்திற்கு விற்பதற்காக துணி மூட்டைகளை மீண்டும் அனுராதபுரத்திற்கு கொண்டு சென்றார். காணி கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டார்.
முன்பு அவர் அடிக்கடி ஸ்ரீ மஹா போதிக்கு போவாராம். 1981 இல் கணவனும் மனைவியும் புத்தரை வழிபட்டபோது, அவருடைய மனம் தள்ளாடியதாம். அவர் அதைப் பற்றி அதிகம் யோசிக்கவில்லையாம்.
எனினும், அவர் அடிக்கடி நினைவிழந்து அருள்வாக்கு சொல்ல ஆரம்பித்தாரம். தன்னை தானே உணர்வதற்கு முன்பாக, சுற்றியிருந்தவர்கள் தனக்குள் அமானுஷ்ய சக்தியிருந்ததை அவதானித்ததாக தெரிவித்தார்.
இதேவேளை, தன்னிடம் உதவி கோரி முதன்முதலில் வந்தவர் ஒரு முஸ்லிம் என்றும் தெரிவித்தார்.
ஞானா மயங்கி விழுந்தால், என்ன நடக்கிறது என்ற நினைவு ஞானாக்காவிற்கு இருக்காதாம். ஆனால், அவருக்குள் உள்ள மற்றைய நபரான – அமானுஷ்ய சக்தியுள்ளவர் இயங்கிக் கொண்டிருப்பாராம். மயக்கம் தெளிந்த பின்னர், என்ன நடந்ததென ஞானாக்காவிற்கு தெரியாதாம். அதாவது, ஞானாக்காவின் உடல் தெய்வீக செய்திகளை தெரிவிக்கும் ஊடகமாம்.
ஆரம்ப நாட்களில்- 41 ஆண்டுகளுக்கு முன்பு- பலர் புனிதபூமிக்கு வரவில்லை, ஆனால் ஞானாக்காவின் அருமை பெருமைகள் வாய்வழியாக பரவி, பெருமளவானவர்கள் மருந்து தேடி வருவதாக தெரிவித்தார். இப்போது நாளாந்தம் 800-க்கும் மேற்பட்டவர்கள், சில சமயங்களில் 1,000-க்கும் அதிகமானவர்கள், அவரிடம் பரிகாரத்திற்காக வருகின்றனர்.
சூனியம், மாந்திரீகம், பலி, செய்வினை ஆகியவை அங்கு நடைபெறுவதில்லை, மருத்துவ சேவைகள் மட்டுமே செய்யப்படுகிறதாம்.
ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும், வெள்ளை உடை அணிந்து அங்கு வருகிறார்களாம். தோட்டத்தைச் சுத்தம் செய்து, சாமான்களைத் துடைத்து, விளக்குகளை ஏற்றி, அன்னதானம் செய்துவிட்டு, ஞானாக்காவிற்குள் உள்ள மற்றைய நபரான அமானுஷ்ய சக்தியின் அழைப்பிற்காக அமைதியாக அமர்கிறார்களாம்.
அவரது தியான அறையில் பத்தினி தெய்வமாகவே தரிசிக்கிறார்களாம். இதன்போது, அவர்களிற்கு அருள்வாக்கு சொல்வாராம்.
ஒரு மாதத்திற்கு ஒருமுறை, செவ்வாய் அன்று, காளி அவரது உடலில் இறங்கி ஞான காளியாக அருள்வாக்கு சொல்லி, ஆசீர்வாதம் வழங்குகிறாராம்.