24 C
Jaffna
January 6, 2025
Pagetamil
இந்தியா முக்கியச் செய்திகள்

இலங்கைக்கு தமிழக அரசின் நிவாரணப் பொருட்களுடன் புறப்பட்டது கப்பல்: முதல்வர் கொடியசைத்து அனுப்பி வைத்தார்

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் அரிசி உள்ளிட்ட நிவாரண பொருட்களை சென்னை துறைமுகத்தில் இருந்து ஏற்றிச் செல்லும் கப்பலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி: சென்னை துறைமுகத்தில், இலங்கை வாழ் மக்களுக்கு உதவிடும் வகையில் அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பி வைக்கும் நிகழ்வின் முதற்கட்டமாக 9000 மெட்ரின் டன் அரிசி, 200 மெட்ரிக் டன் ஆவின் பால்பவுடர் மற்றும் 24 மெட்ரிக் டன் அத்தியாவசிய மருந்துப் பொருட்களை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (மே 18) இலங்கை நாட்டிற்கு சரக்குக் கப்பலில் கொடியசைத்து அனுப்பி வைத்தார். இன்று அனுப்பப்பட்ட முதற்கட்ட உதவிப் பொருட்களின் மதிப்பு 45 கோடி ரூபாய் ஆகும்.

“வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்!” என்றார் ராமலிங்க அடிகளார். அதேபோல “யாதும் ஊரே யாவரும் கேளிர்!” என்ற கணியன் பூங்குன்றனாரின் பொன்மொழிக்கும் ஏற்ப நீராலும் நிலத்தாலும் பிரிந்திருந்தாலும் துன்புறும் உயிர்கள் அனைத்தும் நம் உறவினர்களே என்ற தாயுள்ளத்தோடு, இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப் பொருள் தட்டுப்பாட்டில் சிக்கித் தவித்து இன்னலுறும் இலங்கை மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தமிழக மக்களின் சார்பில் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, அப்பொருட்களை வழங்க உரிய அனுமதி வழங்குமாறு 31.03.2022 அன்று டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்த போது தமிழக முதல்வர் வலியுறுத்தினார். மேலும், மத்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இதுதெடர்பாக கோரிக்கை வைக்கப்பட்டதுடன் 15.04.2022 அன்று கடிதமும் எழுதி நினைவூட்டினார்.

இலங்கை நாட்டின் பொருளாதார நிலைமை மிகவும் மோசமடைந்த நிலையில் தமிழக அரசின் சார்பில் இலங்கை மக்களுக்கு உதவி புரிந்திட, 40 ஆயிரம் டன் அரிசி, உயிர் காக்கக்கூடிய மருந்துப் பொருட்கள், குழந்தைகளுக்கு வழங்க 500 டன் பால் பவுடர் ஆகிய அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி வைக்கத் தேவையான ஏற்பாடுகளை செய்து உரிய அனுமதிகளை வழங்க வேண்டும் என்று மத்திய அரசினை வலியுறுத்தி தமிழக முதல்வரால் தமிழக சட்டப் பேரவையில் 29.04.2022 அன்று தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழக முதல்வரின் தனித் தீர்மானத்தில் அறிவிக்கப்பட்டப்படி, இலங்கை மக்களுக்கு உதவக்கூடிய வகையில் உணவு மற்றும் அத்தியாவசிய மருந்துப் பொருட்களை அனுப்பி வைக்கும் பணியினை சீரிய முறையில் செய்திட அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், தமிழ்நாடு அரசு மருந்துப்பொருட்கள் நிறுவனம் மற்றும் ஆவின் நிறுவனம் ஆகிய துறைகளை உள்ளடக்கிய உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டது.

இதனிடையே, தமிழக அரசின் தொடர் நடவடிக்கைகளின் காரணமாக மே 13 அன்று இதற்கான மத்திய அரசின் இசைவு பெறப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, இலங்கை வாழ் மக்களுக்கு முதற்கட்டமாக அத்தியாவசியப் பொருட்களான அரிசி, ஆவின் பால் பவுடர் மற்றும் அத்தியாவசிய மருந்துப் பொருட்களை TAN BINH 99 என்ற சரக்குக் கப்பலில் அனுப்பி வைக்கும் நிகழ்வினை தமிழக முதல்வர் இன்று சென்னை துறைமுகத்தில், கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் சிறப்பு நிகழ்வாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும் அத்தியாவசியப் பொருட்களின் மாதிரித் தொகுப்பினை இலங்கை துணைத் தூதர் முனைவர் வெங்கடேசுவரனிடம் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர், சிறுபான்மையினர் நலன் மற்றும் அயலகத் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி.கே.எஸ்.மஸ்தான், பொதுத்துறை செயலாளர் முனைவர் டி. ஜகந்நாதன், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் மேலாண்மை இயக்குநர் டாக்டர் என். சுப்பையன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் டாக்டர் எஸ். பிரபாகர், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத் தலைவர் தீபக் ஜேக்கப், சென்னை துறைமுக பொறுப்புக் கழகத் துணைத் தலைவர்எஸ். பாலாஜி அருண்குமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

முக்கிய தீர்மானங்கள் இல்லை… வழக்கம் போல கூடிக்கலைந்தது ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி!

Pagetamil

இந்திய இராணுவ வீரர்கள் இறப்பு

east tamil

டேட்டிங் செயலியில் அமெரிக்க மாடல் என ஏமாற்றி 700 பெண்களிடம் பணம் பறித்த வாலிபர் கைது

Pagetamil

விண்வெளியில் முளைக்க தொடங்கிய காராமணி பயறு விதைகள்: பரிசோதனை வெற்றி என இஸ்ரோ அறிவிப்பு

Pagetamil

‘சார்’ சர்ச்சை: அண்ணா பல்கலை. விசாரணை குறித்து ஆதாரமற்ற தகவல் – காவல் துறை விளக்கம்

Pagetamil

Leave a Comment