இலங்கை மக்களுக்கு தமிழ்நாடு சார்பாக வழங்கவுள்ள பொருட்கள் நாளை மாலை அனுப்பி வைக்கப்படுகிறது.
இலங்கை மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள், உயிர்காக்கும் மருந்துகள் வழங்க மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என சட்டப்பேரவையில் கடந்த மாதம் 29ஆம் திகதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி சட்டப்பேரவையில் அன்று பேசிய முதல்வர் ஸ்டாலின் , “இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கலாம் எனத் தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது.முக்கியமாக, 40 ஆயிரம் டன் அரிசி: இதனுடைய ஒட்டுமொத்த மதிப்பு சுமார் 80 கோடி ரூபாய், அதேபோல், உயிர் காக்கக்கூடிய 137 மருந்துப் பொருட்கள் இதன் மதிப்பு 28 கோடி ரூபாய், குழந்தைகளுக்கு வழங்க 500 டன் பால்பவுடர் இதன் மதிப்பு 15 கோடி ரூபாய் இவற்றையெல்லாம் இலங்கையில் வாழக்கூடிய அனைத்து மக்களுக்கும் நாம் வழங்க நினைக்கிறோம். எனவே மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதுடன், கடிதத்தின் வாயிலாகவும் கோரிக்கை வைத்தார்.
இதற்கு ஒப்புதல் அளித்த மத்திய அரசு, தமிழ்நாடு அரசு வழங்கும் நிவாரண பொருட்கள் தூதரகம் மூலம் இலங்கையிடம் ஒப்படைக்கப்படும் . நிவாரணப் பொருட்களை வழங்குவதற்கும், அதை வினியோகம் செய்வதற்கும் மத்திய அரசுடன் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஒருங்கிணைந்து செயல்படலாம் என்று அறிவித்தது.
இதை தொடர்ந்து அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ், நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குனர் எஸ்.பிரபாகர், ஆவின் நிர்வாக இயக்குநர் சுப்பையன், மருத்துவப் பணிகள் கழக நிர்வாக இயக்குநர் தீபக் ஜோசப் ஆகிய 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவையும் தமிழ்நாடு அரசு நியமித்தது. இக்குழு இலங்கைக்கு பொருட்கள் அனுப்ப ஏற்பாடுகள் செய்தன.
இந்நிலையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தபடி தமிழ்நாட்டிலிருந்து நிவாரண பொருட்கள் அடங்கிய கப்பல் சென்னையிலிருந்து நாளை புறப்படுகிறது.
நாளை மாலை 5 மணிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிவாரண பொருட்களை அனுப்பி வைக்க உள்ளார். 40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர், 137 வகை உயிர் காக்கும் மருந்துகள் அத்தியாவசியப் பொருட்கள் ஆகியவை அனுப்பி வைக்கப்பட உள்ளன.




