27.6 C
Jaffna
March 2, 2025
Pagetamil
கிழக்கு

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வை படமெடுக்க முயன்ற புலனாய்வாளர் அகற்றப்பட்டார்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் மூன்றாம் நாளினை நினைவுகூறும் முகமாக ”முள்ளிவாய்க்கால் கஞ்சியை” நினைவுகூறும் நிகழ்வொன்று இன்று (14) திகதி மட்டக்களப்பு சத்துரகொண்டான் படுகொலை நினைவுத்தூபி முன்பாக இடம்பெற்றது.

வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்
உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சத்துரகொண்டான் படுகொலை நினைவுத்தூபி முன்பாக ”முள்ளிவாய்க்கால் கஞ்சி” காய்ச்சப்பட்டு வீதியால் சென்ற மக்களுக்கு வழங்கப்பட்டதுடன், ”முள்ளிவாய்க்கால் கஞ்சி” தொடர்பான துண்டும் பிரசுரமும் வழங்கி வைக்கப்பட்டது.

இதன்போது மதகுருமாருக்கு முதலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, வீதியால் பயணித்த மக்களுக்கும் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது.

இதன்போது வழங்கப்பட்ட துண்டுப் பிரசுரத்தில் பின்வருமாறு அச்சிடப்பட்டிருந்தது,

2009, தமிழர் மீது கட்டவிழ்க்கப்பட்ட போரின் இறுதி நாட்கள் அவை. நாற்றிசையும் சூழ்ந்திருந்த இராணுவம் அப்பாவி மக்களின் தலைகளைச் சுட்டுச் சிதறடித்துக் கொண்டிருந்தது. அதுபோதாதென்று ஏவப்பட்ட எறிகணைகள் – கொத்துக்குண்டுகள் மக்களின் பதுங்குகுழிகள் மீது கொத்துக்கொத்தாய் வீழ்ந்து வெடித்தன. பிணங்களும், விழுப்புண்ணடைந்தோர் கொதிக்கும் குருதியுமாக முள்ளிவாய்க்கால் எனப்படும் ஈழ
அவலநிலம் காட்சிதந்தது.

விடுதலையை அவாவிய ஒரு தேசத்தின் மக்களை மரணமும் பசியும் சூழ்ந்திருந்தது. பணத்திற்கு எந்த பெறுமதியும் இருக்கவில்லை, வாங்குவதற்கு எந்த உணவுப்பொருளும்
இருக்கவில்லை.

இந்நிலையில்தான், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பும் சில தொண்டு நிறுவனங்களும் இணைந்து, வன்னி வன்னி பெருநிலப்பரப்பின் சொந்தக்காரர்களுக்கு அவர்தம் உயிர் பிழைப்புக்கென ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’ என்கிற ஜீவாமிர்தத்தை அறிமுகப்படுத்தினர். நீரினுள் சிறிதளவு அரிசியையும் கிடைத்தற்கரிய உப்பையும் இட்டு காய்ச்சி உருவாக்கப்பட்டதே இவ்வுணவு.

சிறுவர்கள், முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் போன்றோர் வெறும் வயிற்றுடன் கஞ்சியினைப்பெற வரிசையில் காத்திருந்தனர். இந்த காத்திருப்பின்போதுகூட கொத்துக்குண்டுகளாலும் விமானத் தாக்குதல்களாலும் பல்லாயிரம் உயிர்கள்
காவுவாங்கப்பட்டன.

காத்திருந்துகாத்திருந்து கையில் வாங்கிய கஞ்சியை, ஒரு மிடறு பருகி வயிற்றில் தாங்கிய
சிசுவின் பசியாற்றுவதற்கு முன்பே வயிறு கிழிந்து, இரத்தம் பீறிட குடலும் கருவும் வெளிச்சிதறி மாண்டுபோன பேரவலங்கள் முள்ளிவாய்க்கால் கஞ்சியின் விரும்பத்தகாத
சுவையாக எம் தலைமுறையின் நனவிலியில் பதிந்துள்ளது.

நீதிகேட்டுப் போராடும் எம்மக்களின் அவலக்குரல்களை இந்த உலகம் செவிமடுக்கும் நாள்வரை ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’ பெருவலியாகவும், அடையாளமாகவும் உணர்த்தப்படவேண்டியது எமது வரலாற்றுக்கடமையாகும்.

உணர்வுபூர்வமான இப்பெரும் மக்கள் எழுச்சியின் போராட்ட வழிமுறைகளில் ‘முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வரலாற்றில் என்றும் நிலைத்தே நிற்கும்.

இதன்போது அருட்தந்தையர்களான அருட்பணி ஜோன் ஜோசப்மேரி, அருட்பணி கே.ஜெகதாஸ், மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் ஏற்பாட்டாளர் குருசுமுத்து லவகுமார் ஆகியோர் கலந்து
கொண்டிருந்தனர்.

இதன் போது குறித்த நிகழ்வை படம் எடுத்த புலனாய்வு பிரிவை சேர்ந்த ஒருவர் நிகழ்வின் ஏற்பாட்டாளர்களினால் துரத்தியடிக்கப்பட்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சம்மாந்துறையில் எரிபொருளுக்கு வரிசை

Pagetamil

கொம்மாதுறையில் யானைத்தாக்குதலில் ஆசிரியர் வீடு பெரும் சேதம்

Pagetamil

திருக்கோணேஸ்வரர் ஆலய லிங்கேற்பவர் அபிஷேகம் மற்றும் பூஜை

Pagetamil

யானை தாக்கி குடும்பஸ்தர் பலி – மூதூரில் சம்பவம்

Pagetamil

குடிசைகளை எரித்த வனவளத் திணைக்கள அதிகாரிகள்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!