பிரதமர் பதவியை ஏற்பது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் சரத் பொன்சேகாவுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தொடர்பு கொண்டு பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இடைக்கால அரசாங்கம் அமைப்பது தொடர்பில் கட்சிகளுக்கு இடையில் இணக்கம் காணப்படாத நிலையில், தற்போதைய அரசியல் முட்டுக்கட்டையை நீக்கும் முயற்சியாக ஜனாதிபதி இந்த நகர்வை மேற்கொண்டுள்ளார்.
எவ்வாறாயினும், பிரதமராக நியமிக்கப்பட்டால், நாடாளுமன்றத்தின் பெரும்பான்மைப் பலம் இருப்பதாக பொன்சேகா நிரூபிக்க வேண்டும்.
இந்த பேச்சுக்களின் ஒரு பகுதியாகவே ரணில் விக்கிரமசிங்கவுடனும் ஜனாதிபதி பேச்சு நடத்தி வருகிறார்.
எவ்வாறாயினும், ரணில் விக்கிரமசிங்கவையே பொதுஜன பெரமுன ஆதரிக்க வாய்ப்புள்ளதால், அவருக்காக வாய்ப்பே பிரகாசமாக உள்ளது.
பிரதமர் பதவியை ஏற்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி கோரியிருந்தார். எனினும், அதற்கு சஜித் தயாராக இருக்கவில்லை. இடைக்கால அரசாங்கத்தில் இணைவதெனல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டுமென சஜித் பிரேமதாச வலியுறுத்தியிருந்தார்.
எனினும், ஐக்கிய மக்கள் சக்திக்குள் சஜித்தின் நிலைப்பாட்டிற்கு கடுமையான எதிர்ப்பு உள்ளது. சஜித்தின் தயக்கத்தை, சரத் பொன்சேகாவும் எதிர்த்து வருகிறார். இதனால் ஐக்கிய மக்கள் சக்திக்குள் பிளவு ஏற்படலாமென தெரிகிறது.