கஞ்சி பரிமாறுவோம் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம்’ என்ற தலைப்பில் முள்ளி வாய்க்கால் அவல நிலை குறித்து அதனை நினைவு கூர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று (மே -12) இல் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வினை வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் ஏற்பாடு செய்திருந்தனர்.
காந்தி பூங்காவில் ஒன்று கூடியவர்கள் உப்பில்லாத கஞ்சியினை அவ்விடத்தில் காச்சியதுடன் அதனை சிரட்டையில் கொண்டு வீதியினால் சென்றோர்கள்,மற்றும் பஸ் தரிப்பிடங்களில் இருந்தோர்கள் என பலருக்கும் வழங்கினார்கள். அத்துடன் முள்ளி வாய்க்கால் கஞ்சி என்ற துண்டுப் பிரசுரங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
அத் துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது
2009 இறுதி யுத்த காலப்பகுதியில் மக்களை மரணமும் பசியும் சூழ்ந்திருந்தது. பணத்திற்கு எந்த பெறுமதியும் இருக்கவில்லை. வாங்குவதற்கு எந்த உணவுப் பொருளும் இருக்கவில்லை. இந் நிலையில்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பும் சில தொண்டு நிறுவணங்களும் இணைந்து உயிர் பிழைப்புக்கென ‘முள்ளி வாய்க்கால் கஞ்சி ‘ என்கின்ற ஜீவாமிர்தத்தை அறிமுகப்படுத்தினர்.
நீரினுள் அரிசியை இட்டு கிடைத்தற்கரிய உப்பையும் இட்டு காய்ச்சி உருவாக்கப்பட்டதே இவ்வுணவாகும்.
இவ் உணவினை பெற்றுக்கொள்ள சிறுவர்கள்,முதியவர்கள், கர்ப்பினி பெண்கள் போன்றோர் வெறும் வயிற்றுடன் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதன்போது கொத்துக் குண்டுகளாலும் விமானத் தாக்குதல்களாலும் பல்லாயிரம் உயிர்கள் காவுவாங்கப்பட்டன. நீதி கேட்டு போராடும் எம் மக்களின் அவலக்குரல்களை இந்த உலகம் செவிமடுக்கும் நாள் வரை முள்ளிவாய்க்கால் கஞ்சி பெருவலியாகவும், அடையாளமாகவும் உணர்த்தப்படவேண்டியது வரலாற்று கடமையாகும் என்றும் உணர்வுபூர்வமான இப்பெரும் மக்கள் எழுச்சியின் போராட்ட வழிமுறைகளில் ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’ வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் என வினியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டு இறுதி யுத்த காலப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் நினைவாக முள்ளி வாய்க்கால் கஞ்சிவாரம் அனுஸ்டிக்கப்படுகிறது.
குறித்த நிகழ்வில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்க உறுப்பினர்கள்,மதகுருமார்கள்,சிவில் அமைப்பு பிரதி நிதிகளான சிவயோகராஜா,வடக்கு கிழக்கு முன்னேற்ற கழகத் தலைவர் கு.வி.லவக்குமார் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்வானது மே-12 தொடக்கம் மே-18 வரை ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’ வாரத்தினை நினைவு சுறும் தினமாக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நினவு கூறப்படவுள்ளது.
இதேவேளை இவ் வருடமே முதல் தடைவையாக கிழக்கில் குறிப்பாக மட்டக்களப்பில் ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரம்’ அனுஸ்டிக்கப்பட்டு வருகிறது.