கடலலையில் சிக்கி இழுத்து செல்லபட்டு காணாமல் சென்ற இரு மாணவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை(10) மாலை 5.30 மணியளவில் அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள கடற்கரைப்பகுதியில் இடம்பெற்றுள்ளதுடன்
3 பாடசாலை மாணவர்கள் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டு மாயமானதுடன் அதில் ஒருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அன்றைய தினம் அனுமதிக்கப்பட்டார். அதே வேளை இச்சம்பவத்தில் மாயமான இரு மாணவர்களின் சடலங்கள் மறுநாள் புதன்கிழமை (11) மாலை மீட்கப்பட்டு மரண விசாரணையின் பின்னர் இரவு உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
சுமார் 18 வயது மதிக்கத்தக்க பாடசாலை மாணவர்களே இவ்வாறு இவ்வனர்த்தத்தில் சிக்கிக்கொண்டதுடன் கடல் வழமைக்கு மாறாக கொந்தளிப்பாக காணப்பட்ட நிலையில் அதனையும் பொருட்படுத்தாது கடல் நீச்சலில் ஈடுபட்டிருந்தனர்.
வழமை போன்று குறித்த கடற்கரைப்பகுதியில் விளையாடிய பின்னர் இவர்கள் மூவரும் குளிப்பதற்காக அப்பகுதிக்கு சென்ற நிலையில் இவ்வாறு கடலில் இழுத்துச் சென்றுள்ளது.இதில் ஒருவர் மீட்கப்பட்டதுடன் ஏனைய இருவரை தேடும் பணியில் கடற்படையினர் கடற்தொழிலாளர்கள் உறவினர்கள் ஈடுபட்டிருந்த பின்னர் புதன்கிழமை (11) மாலை குறித்த கடற்பகுதிகளில் இருந்து சடலங்கள் பொதுமக்கள் முன்னிலையில் மீட்கப்பட்டது.
குறித்த அனர்த்தத்தில் மூவரில் ஒருவர் அலையில் இழுத்து செல்லப்பட்ட நிலையில் அவர் அன்றைய தினம் மீட்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். ஏனைய இரு நண்பர்களும் அலையில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போயினர்.தொடர்ந்து பெருமளவான மக்கள் கடற்கரை பகுதியில் குவிந்துள்ளதோடு தாழமுக்கம் காரணமாக கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படுவதால் இடைவிடாது மாயமான இரு மாணவர்களது சடலங்கள் தேடினர்.
பின்னர் மாலை குறித்த இரு மாணவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு மருதமுனை பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டு மரண விசாரணை அதிகாரி முகமட் இப்றாகீம் நஸ்ரூன் இஸ்லாம் முன்னிலையில் விசாரணைகள் இடம்பெற்ற பின்னர் இரவு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் பெரிய நீலாவணை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த சம்பவத்தில் மருதமுனை அல்மனார் தேசிய பாடசாலை மாணவர்களான முகமது பைரூஸ் வசீம் ஜெசீத் மற்றும் உபைத்துல்லாஹ் அத்தீஸ் அகமட் ஆகியோரே இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களாவர்.
-பா.டிலான்-