கண்டி, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை மற்றும் மாத்தறை மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களில் நுவரெலியா மாவட்டத்தில் 213 மில்லிமீற்றர் மழையும், மஸ்கெலியாவில் 153 மில்லிமீற்றர் மற்றும் டிக்கோயாவில் 117 மில்லிமீற்றர் மழையும் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் இரத்தினபுரி, கேகாலை, கண்டி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் கடந்த 24 மணித்தியாலங்களில் 75 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் ஆறு மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாளை காலை 7.30 மணி வரை இந்த எச்சரிக்கை நீடிக்கும்.
நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு இரண்டாம் நிலை எச்சரிக்கையும், களுத்துறை, கண்டி, கேகாலை மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கு முதல் நிலை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான பிரதீப் கொடிப்பிலி ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
மத்திய மலைநாட்டு பகுதியில் வசிப்பவர்கள் அவதானமாக இருக்க வேண்டும் என கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது என்றார்.
அனைத்து மண்சரிவு அறிகுறிகள் குறித்தும் அவதானமாக இருக்குமாறு பிரதிப் பணிப்பாளர் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.