இலங்கை பொருளாதார நெருக்கடியையடுத்து புதுமண தம்பதிகள் குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளிவைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடளாவிய ரீதியில் இந்த புதிய போக்கு உருவாகி வருவது தெரிய வந்துள்ளது.
பொருளாதார நெருக்கடி, பால்மா, குழந்தைகளிற்கான பொருட்களிற்கான தட்டுப்பாடு காரணமாக இந்த புதிய போக்கு உருவாகியுள்ளது.
குழந்தைகளுக்கான சோப்பு, நாப்கின்கள் மற்றும் டயப்பர்கள் ஆகியவை சாதாரண மக்கள் வாங்குவதற்கு சிரமப்படும் வகையில் விலை உயர்ந்து வருகிறது.
குழந்தை பெற்றுக்கொள்ள சில மாதங்கள் காத்திருக்க வேண்டிய தம்பதியர்களும் இப்பொழுதே பொருட்களை கொள்வனவு செய்து வைத்து வருவதாக வர்த்தக நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாளாந்தம் விலை அதிகரித்து வருவதால், சில மாதங்களின் பின்னர் பொருட்களின் விலையை கற்பனை செய்ய முடியாத நிலையில் இருக்குமென்பதால், குழந்தையை எதிர்பார்க்கும் பெரும்பாலான தம்பதிகள் பொருட்களை முன்னாயத்தமாக வாங்கி வைத்து வருகிறார்கள்.
12 நாப்கின்களின் ஒரு செட் முன்பு ரூ.650 ஆக இருந்தது. தற்போது ரூ.1,195க்கு விற்கப்படுகிறது. சில வாரங்களுக்கு முன்பு ரூ.12,000 முதல் ரூ.17,000 வரை இருந்த ஒரு கட்டில் இப்போது ரூ.25,000க்கு அதிகமாக விற்கப்படுகிறது. 4,500 ரூபாய்க்கு விற்கப்படும் குழந்தைகளுக்கான ஆடைகள் கூட தற்போது 7,000 ரூபாய்க்கு விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம் ரூ.375க்கு விற்கப்பட்ட பேபி டவல்கள் தற்போது ரூ.675க்கு விற்கப்படுவதாகவும், ஃபிளானல் சூட் விலை ரூ.325ல் இருந்து ரூ.545 ஆகவும் உயர்ந்துள்ளதாகவும் சில்லறை விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.