ஜனாதிபதிகையும், அரசையும் பதவிவிலக வலியுறுத்தி நாடு முழுவதும் கொந்தளித்து வரும் நிலையில், ஜனாதிபதி திடீரென நேற்று இரவு அவசரகால சட்டத்தை பிறப்பித்திருந்தார். இதற்கு பல்வேறு தரப்புக்களில் இருந்தும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கமும் இதனை கண்டித்துள்ளது.
சட்டத்தரணிகள் சங்கத்தின் அறிக்கையில்,
2022 ஆம் ஆண்டு மே மாதம் 6 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியினால் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டமை குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பெரிதும் கவலை கொண்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி, ஜனாதிபதி ஒரு குறுகிய காலத்திற்கு அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியபோது, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அப்போது குறிப்பிட்டதை போல, ஏராளமான பொதுமக்கள் எதிர்ப்புகள் மற்றும் வேலைநிறுத்தங்கள் உள்ளிட்டட நாட்டின் தற்போதைய நிலைமைக்கு அவசரகால பிரகடனம் தீர்வாகாது என்று சட்டத்தரணிகள் சங்கம் கருதுகிறது.
அமைதியான போராட்டங்கள் மற்றும் கருத்து வேறுபாடுகளை நசுக்கவோ அல்லது தன்னிச்சையான கைதுகள் மற்றும் காவலில் வைக்கவோ அவசரகாலச் சட்டம் பயன்படுத்தப்படக்கூடாது என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம். போராட்டங்கள் வன்முறையாக இருக்கக்கூடாது, எப்போதும் அமைதியாக இருக்க வேண்டும்.
நாடும் அதன் மக்களும் எதிர்நோக்கும் பாரதூரமான நெருக்கடியையும், நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் முட்டுக்கட்டைக்குத் தீர்வுகாண வேண்டிய அவசரத் தேவையையும் உணர்ந்துகொள்ளுமாறு அரசாங்கத்திலும் எதிர்க்கட்சியிலும் உள்ள அனைத்துத் தரப்பினரிடமும் நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
ஜனாதிபதி ஏன் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தினார் என்பதற்கான காரணங்களை மக்களுக்கு உடனடியாக விளக்குமாறு ீனாதிபதியை சட்டத்தரணிகள் சங்கம் கேட்டுக்கொள்கிறது.
அவசர நிலைப் பிரகடனத்தை திரும்பப் பெறவும், இறையாண்மையின் அம்சங்களான பேச்சு மற்றும் வெளியிடும் சுதந்திரம், அமைதியான முறையில் ஒன்றுகூடும் சுதந்திரம் உள்ளிட்ட கருத்துச் சுதந்திரம் போன்ற மக்களின் அடிப்படை உரிமைகளை உறுதி செய்யுமாறு அரசை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
நாட்டின் மக்களை அமைதியாக இருக்கவும், அமைதியான முறையில் செயல்படவும் அழைப்பு விடுக்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.