கனடாவின் மத்திய ஒன்டாரியோவில் இயங்கிய சட்டவிரோத கஞ்சா உற்பத்தி மற்றும் விநியோக வலையமைப்பை பொலிசார் முடக்கியுள்ளனர்.
6 மில்லியன் டொலருக்கும் அதிகமான பொருட்கள் கைப்பற்றப்பட்டதுடன், 3 சந்தேகநபர்களும் கைதாகினர். கைதானவர்களில் இருவர் இலங்கைத் தமிழர்கள். அவர்களில் ஒருவர் இளம்பெண்.
ஒன்டாரியோ பொலிசார், கஞ்சா அமலாக்கக் குழு, கவர்தா லேக்ஸ் நகரம் மற்றும் பீட்டர்பரோ சமூக தெரு குற்றப் பிரிவுகள், மாகாண சொத்து பறிமுதல் பிரிவு மற்றும் டர்ஹாம் பிராந்திய காவல்துறையின் உதவியுடன், ஏப்ரல் 21 அன்று மூன்று குடியிருப்புக்கள் மற்றும் இரண்டு வாகனங்கள் என ஐந்து இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
இதன்போது, பதப்படுத்தப்பட்ட 470 கிலோகிராம் கஞ்சா, 100 கிலோ ஹேஷ் போதைப்பொருள், 80 கிலோ கஞ்சா பிசின், 100 கிலோ கஞ்சா உண்ணக்கூடிய பொருட்கள், ஏழு கிலோ கஞ்சா ஷட்டர், 80 கிலோ காய்ச்சப்பட்ட கஞ்சா, 700 கிராம் பிசிலோசைபின் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றினர்.
400,000 டொலர் ரொக்கப் பணத்தையும் பொலிசார் கைப்பற்றினர்.
ஒமேமியைச் சேர்ந்த தோமஸ் குரேலி (60), போல்டனைச் சேர்ந்த கபிலன் அனுரா (26), மற்றும் கிளாரிமொன்ட்டைச் சேர்ந்த தனோஜா தர்மகுலசேகரம் (27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் மீது 13 குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.