அடுத்து வரும் 35 ஆண்டுகளிற்கு இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியே நீடிக்கும். எனவே, ஈழத்தமிழர்கள் மத்திய அரசுடன் நெருக்கமான உறவை பேண வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவர் கு.அண்ணாமலை அறிவுரை கூறியுள்ளார்.
இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள தமிழக பா.ஜ.க தலைவர் கு.அண்ணாமலைக்கும், தமிழ் தேசிய கூட்டடமைப்பிற்குமிடையிலான கலந்துரையாடல் நேற்று (2) யாழ்ப்பாணம் கிறீன் கிராஸ் விடுதியில் இடம்பெற்றது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் மாவை சேனாதிராசா, த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன், சிசிறிதரன், சீ.வீ.கே.சிவஞானம், ப.சத்தியலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நட்புரீதியான இந்த கலந்துரையாடலில், கு.அண்ணாமலை தெரிவித்ததாவது-
‘இலங்கையில் அமைதியான நிலமை நீடிக்க வேண்டும், ஈழத்தமிழர்களிற்கு முறையான அதிகாரப்பகிர்வு கிடைக்க வேண்டுமென்பதே பா.ஜ.கவின் நிலைப்பாடு.
விசேடமாக மோடிஜி அவர்கள் ஈழத்தமிழர்களிற்கு எதையாவது செய்ய வேண்டுமென விரும்புகிறார். அதை தனிப்பட்டரீதியிலும் நான் அறிவேன்.
இந்த சமயத்தை நீங்கள் (இலங்கை தமிழர்கள்) சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்தியாவில் அடுத்து வரும் 35 ஆண்டுகளிற்கு பா.ஜ.கவின் ஆட்சியே நீடிக்கும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே, மத்திய அரசாங்கத்துடன் தொடர்பில் இருங்கள். இன்னும் நெருக்கத்தை அதிகரித்துக் கொள்ளுங்கள்’ என ஆலோசனை கூறினார்.
அண்மையில் இந்திய பிரதமர் தன்னை வந்து சந்திக்க அழைப்பு விடுத்திருந்த சமயத்தில், தனது மகளின் கடவுச்சீட்டு காணாமல் போய்விட்டதென இரா.சம்பந்தன் குறிப்பிட்டு, அந்த சந்திப்பை இரத்து செய்தார். பிறிதொரு திகதியை கூட்டமைப்பு கோரிய போதும், இந்தியா அதன் பின் சந்திப்பு திகதி ஒதுக்கவில்லை. இந்த பின்னணியிலேயே கூட்டமைப்பினருக்கு கு.அண்ணாமலை இந்த அறிவுரையை கூறியுள்ளார்.