ராஜபக்சக்கள் மீது மக்கள் கோபம் கொண்டுள்ள நிலையில் அவர்களுடன் இணைந்து இடைக்கால அரசாங்கத்தை எவ்வாறு அமைக்க முடியும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களான வாசுதேவ நாணயக்கார மற்றும் உதய கம்மன்பில மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் அரசாங்கத்தில் இருந்து தம்மை சுயாதீனமாக பிரகடனப்படுத்தியதாகவும், எனினும் அரசியல் நோக்கத்துடன் செயற்படுவதாகவும் ஊடகவியலாளர் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் குற்றம் சுமத்தினார்.
ஐக்கிய மக்கள் சக்தி தற்போதைய நிர்வாகத்துடன் இடைக்கால அரசாங்கத்தை அமைக்காது என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கத்தின் பதவி விலகலை பொதுமக்கள் கோரும் மக்களின் குரலை ஐக்கிய மக்கள் சக்தி பிரதிநிதித்துவப்படுத்துவதாக பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.
பொதுஜன பெரமுன எவ்வாறு பொதுமக்களின் குரலை புறக்கணித்து இடைக்கால அரசாங்கத்தை அமைக்க முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.