29.8 C
Jaffna
March 29, 2024
தமிழ் சங்கதி

முஸ்லிம்களுடன் இணைந்து போராட மறுத்த கூட்டமைப்பு; ‘கூ’ அடித்த முஸ்லிம் தரப்பு; பிசுபிசுத்த போராட்டம்: கல்முனையில் நடந்தது என்ன?

அம்பாறை, கல்முனை பகுதியில் கடந்த 29ஆம் திகதி அரசுக்கு எதிரான போராட்டமென, ‘திடீர்’ போராட்டமொன்று நடந்தது. தமிழ் தேசிய கூட்டமைப்பு, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து இந்த போராட்டத்தை நடத்தியதாகவும், இரு இன மக்களும் கலந்து கொண்டதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இலங்கையில்- குறிப்பாக கிழக்கில் அப்படியொரு நிலைமை உருவாகினால் இரண்டு இன மக்களும் உண்மையில் மகிழ்ச்சியடைய வேண்டும்.

ஆனால், உண்மையில் இரு இன மக்களும் மகிழ்ச்சியடையும் விதமாக அந்த போராட்டம் அமையவில்லை. இரு இனங்களும் எவ்வளவு தூரம் பிளவுபட்டுள்ளனர் என்பதும், அந்த பிளவை சரிசெய்யும் முயற்சியில் இரண்டு கட்சிகளின் தலைமைகளும் எவ்வளவு தூரம் தோல்வியடைந்துள்ளனர் என்பதும் அந்த போராட்டத்தின் பின்னணியில் நடந்த சங்கதிகளில் புலப்பட்டது.

தமிழ் முஸ்லிம் உறவை மீள கட்டியெழுப்புகிறோம் பேர் வழியென இப்பொழுது சுமந்திரன், சாணக்கியன், ஹக்கீம் தரப்பினர் மேற்கொள்ளும் இணக்கப்பாடுகள் அனைத்தும், கிழக்கு மாகாணசபையில் யார் முதலமைச்சராக வருவதென்பதில் இரண்டு தலைமைகளிற்குமிடையிலான இரகசிய இணக்கப்பாடுகள் என்பதற்கு அப்பால் வேறெந்த அர்த்தத்தையும் கொண்டிருக்கவில்லையென்பது கடந்த 29ஆம் திகதி கல்முனையில் புலப்பட்டது.

29ஆம் திகதி மதியம் 1.00 மணிக்கு கல்முனையில் ஆர்ப்பாட்டம் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் இளைஞர் அணியினர் அறிவித்தல்களை பகிர்ந்தனர். இதில் 4 நாடாளுமன்ற உறுப்பினர்களின் புகைப்படங்கள் அச்சிடப்பட்டிருந்தன. மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரனிற்கு சம்பவமே தெரியாது. ஆனால் அவரது புகைப்படத்தையும் ஏற்பாட்டாளர்கள் பாவித்திருந்திருந்தார்கள்.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் இளைஞர் அணி- குறிப்பாக கிழக்கில் இயங்கும் இளைஞர் அணி-  சுமந்திரன், சாணக்கியனின் இளைஞர் அணியாக செயற்படுவது ஒன்றும் இரகசியமல்ல.

கல்முனையில் மதியம் 1 மணிக்கு ஆர்ப்பாட்டம் நிர்ணயிக்கப்பட்டதற்கு காரணமிருந்தது. அருகிலுள்ள பள்ளிவாசலில் தொழுகை முடிந்ததும் மக்களை போராட்டத்தில் இணைக்கலாமென நினைத்திருப்பார்கள். இதுபற்றி கூட்டமைப்பினர், மு.காவினர் தமக்குள் பேசி இந்த ஏற்பாட்டை செய்திருக்கக்கூடும்.

அன்று கல்முனை நீதிமன்றத்தில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் கலந்து கொண்டவர்களிற்கு எதிராக பொலிசார் தாக்கல் செய்த வழக்கு விசாரணையிருந்தது.

மட்டக்களப்பிலிருந்து கோவிந்தன் கருணாகரம், இரா.சாணக்கியன், பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன் உள்ளிட்டவர்கள் சென்றனர். அவர்களின் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனும் மட்டக்களப்பில் தங்கியிருந்து விட்டு, கல்முனைக்கு சென்றார்.

அவர்களிற்கு அன்று மதியம் கல்முனையில், அம்பாறை தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் வீட்டில் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தமிழ், முஸ்லிம் உறவு ஏற்பட வேண்டும், இரண்டு தரப்பும் ஒற்றுமையாக செயற்பட வேண்டுமென வெளியிலிருப்பவர்கள் மேலோட்டமாக பேசக்கூடும். ஆனால் கிழக்கில் அப்படி மேலோட்டமாக பேசி, பிரச்சனையை தீர்க்கும் நிலைமையில்லை.

இரண்டு உதாரணங்களை சொல்லலாம். கல்முனையில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஹரீஸ் எம்.பி தெரிவாகிறார். கல்முனை பிரதேச செயலக பகுதியில் தமிழர்கள் அதிகாரமிக்க இன்னொரு பிரதேச செயலகத்தை உருவாக்காமல் தடுக்கிறேன் என்ற அவரது பிரச்சாரமும், செயற்பாடும் அந்த பகுதி முஸ்லிம் வாக்காளர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

தம்மிடமுள்ள முக்கிய – தமது வர்த்தக தலைநகராக கருதும் – கல்முனை பறிபோய்விடும் என்ற அச்சம் அவர்களிடமுள்ளது.

மட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சார்பில் சி.சந்திரகாந்தன் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவானதற்கு வெளியில் தெரியாத முக்கிய காரணம், முஸ்லிம்கள் விவகாரத்தில் அவரது அணுகுமுறை. மட்டக்களப்பில் முஸ்லிம் மக்கள் காணிகளை சுவீகரிக்கிறார்கள், மாகாண நிர்வாக அதிகாரத்தை பயன்படுத்தி அதனை கச்சிதமாக செயற்படுத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டும், விரக்தியும் மட்டக்களப்பின் பெரும்பாலான மக்களின் அடிமனதில் உள்ளது.

கடந்த நல்லாட்சியில், கிழக்கு மாகாணசபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு  – சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூட்டாட்சியில் இந்த போக்கு தீவிரமாக இருந்தது என்பது பொதுவான மக்கள் அபிப்ராயம்.

எப்பொழுதும் அரசுகளுடன் ஒட்டியிருந்து நிர்வாக அதிகாரத்தை பேணும் முஸ்லிம் தரப்புக்களிற்கு அது வசதியாகவும் இருந்தது. ஆனால், அந்த போக்கிற்கு கடுமையான தடைக்கல்லாக இருந்தவர் கிழக்கு முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்.

முஸ்லிம்கள் தொடர்பான அச்சமே தமிழ் மக்களின் அச்சமே மட்டக்களப்பில் அதிக விருப்பு வாக்கு பெற்றவராக சந்திரகாந்தனை மாற்றியது.

இரண்டு இனமும் வாழும் கிழக்கில் இப்படி பரஸ்பரம் அச்சத்துடன் வாழ்கிறார்கள்.

அண்மைக்காலத்தில் சாணக்கியன், எம்.ஏ.சுமந்திரன் போன்றவர்கள் முஸ்லிம் தரப்புடன் நெருங்கிச் செல்வதை போல காட்டினாலும், அது சமூகங்களிற்கிடையிலான அச்சத்தில், பிளவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

இன்னும் வெளிப்படையாக சொன்னால், அந்த பிளவை நிவர்த்தி செய்வதை போலவும் அவர்கள் செயற்படவில்லை. இதெல்லாம் கிழக்கு மாகாணசபையின் அடுத்த முதல்வர் யார் என்பதற்கான இரண்டு கட்சி தலைமைகளின் இணக்கப்பாடு மாத்திரமே.

கல்முனையில் முஸ்லிம் மக்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டம்  என்ற திடீர் அறிவிப்பு விடுக்கப்பட்டதுட், மட்டக்களப்பிலிருந்த சென்ற கூட்டமைப்பினருக்கும், அம்பாறையிலிருந்த கூட்டமைப்பினருக்கும் பேரதிர்ச்சி. போராட்டத்தை ஏற்பாடு செய்த எம்.ஏ.சுமந்திரன், இ.சாணக்கியன் தவிர்ந்த மற்றைய எல்லோருக்கும் அதிர்ச்சி.

‘இரண்டு இனங்களும் இணைந்து போராட்டம் நடத்தவதெனில், அது எமக்குள் பேசி, சில பல விடயங்களை பேசி, முறைப்படி செய்ய வேண்டியது, இப்படியான திடீர் அறிவிப்பு போராட்டங்களில் எம்மால் கலந்து கொள்ள முடியாது’ என மட்டக்களப்பு, அம்பாறை பிரமுகர்கள் கூட்டாக கூறிவிட்டனர்.

‘கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்த விடாமல் முஸ்லிம் காங்கிரஸ் முட்டுக்கட்டையிட்டுக் கொண்டிருக்கும் சமயத்தில், கல்முனையில் அவர்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டம் செய்தால், எமது மக்கள் எம்மை செருப்பால் அடிப்பார்கள்’ என கல்முனை மாநகரசபை உறுப்பினர்கள் நேரடியாக சுமந்திரன், சாணக்கியனிடம் கூறியதுடன், அவர்களையும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாமென கேட்டுக் கொண்டனர்.

எனினும், தாம் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வோம் என அவர்கள் கூறவிட்டு சென்றனர்.

அம்பாறை தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசனும் போராட்டத்தில் கலந்து கொள்ள மறுத்து விட்டார்.

கல்முனை நீதிமன்றத்தில் வழக்கு முடிந்ததும் கோவிந்தன் கருணாகரம், பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், த.கலையரசன் ஆகியோர், கலையரசனின் வீட்டிற்கு மதிய உணவிற்கு சென்று விட்டனர். போராட்டத்திற்கு செல்லவில்லை.

கல்முனை மாநகரசபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களும் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

கல்முனை போன்ற சனத்தொகை நிறைந்த நகரில் நூறிற்கும் குறைவானவர்களே போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதேவேளை, போராட்டத்தின்போது ஒரு பகுதி முஸ்லிம் மக்கள் ரவூப் ஹக்கீமிற்கு எதிராக குரலெழுப்ப ஆரம்பித்தனர்.

இன்னும் சிலர், கல்முனையை பிரச்சனையை முதலில் தீர்த்துவிட்டு, மற்றைய பிரச்சனைகளை தீர்க்க போராட்டங்களை நடத்துங்கள் என குரல் எழுப்பினர்.

இதனால் போராட்டம் திடீரென முடிக்கப்பட்டு விட்டது.

இந்த சம்பவம் எம்.ஏ.சுமந்திரன், சாணக்கியன் ஆதரவாளர்கள் கோபமடையும் விவகாரமோ, அவர்களின் எதிர்ப்பாளர்கள் சந்தோசமடையும் சம்பவமோ அல்ல.

இரண்டு தரப்பும் அரசியல், சமூக, மத பிரதிநிதிகளை உள்ளடக்கிய, நிறுவனரீதியாக கூட்டு செயற்பாட்டின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.  அந்த ஞானமுள்ள தலைவர்கள் இரண்டு தரப்பிலும் உள்ளார்களா என்பதே இன்றைய கேள்வி.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் சிறிதரனை மௌனமாக்கியது எது?

Pagetamil

வெடுக்குநாறிமலை அட்டூழியம்: தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்ட முஸ்தீபு!

Pagetamil

தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு எதிராக செயற்பட்டதால் கடல் கடக்க அனுமதிக்க முடியாது: வி.மணிவண்ணனின் கோரிக்கையை நிராகரித்த பாதுகாப்பு அமைச்சு!

Pagetamil

‘திருகோணமலை குழப்பத்துக்கு முடிவில்லாமல் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்த வேண்டாம்’: தமிழ் அரசு கட்சியின் தலைமைக்கு இரா.சம்பந்தன் மீண்டும் அறிவித்தல்!

Pagetamil

‘எனது ஆதரவாளர்கள் புறமொதுக்கப்படுகிறார்கள்’: சுமந்திரனை தடுப்பது உத்தியா?; சம்பந்தனின் புகாரின் பின்னணி!

Pagetamil

Leave a Comment