தனது பெயருக்கும், அமைச்சு பதவிக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்று (29) மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துவிட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இளைஞர் மற்றும் விளையாட்டுதுறை இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கடந்த 25 ஆம் திகதி தமிழ் அரசு கட்சியின் ஏற்பாட்டில் பிள்ளையாரடி பிரதான வீதி பகுதியில் எஸ்.வியாழேந்திரனின் வீட்டுக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது அவதூறு வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருந்தன. இதற்கு எதிராகவே முறைப்பாடு செய்திருந்தார்.
இராஜாங்க அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் எனது வீட்டுக்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் என்னை தொடர்பு படுத்தி உண்மைக்கு புறம்பான செய்திகளை கூறி, அமைச்சு பதவி குறித்து பதாகைகள் மூலம் காட்சிப்படுத்தி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டமை மட்டுமல்லாது, எனது உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமையினால் எனக்கு உள ரீதியான பாதிப்பினை ஏற்படுத்தியிருந்தது.
அதுமட்டுமல்லாது நீதி மன்றத்தில் ஒரு வழக்கு இடம்பெறும்போது உண்மைக்குப் புறம்பான விடயங்களை இவர்கள் திரிவுபடுத்தி வெளியிட்டு வருவதனால் இவர்களுக்கு எதிரான சகல ஆதாரங்களையும் வழக்கு தொடர்வதற்காக எழுத்து மூல ஆவணங்களாக மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் சமர்ப்பித்துள்ளேன்.
சம்மந்தப்பட்ட ஒவ்வொருவருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளேன் என தெரிவித்திருந்தார்.
-மட்டக்களப்பு நிருபர்-




