ஆந்திராவிலிருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தும் கும்பலுடன், பிரியாணி விருந்தில் கலந்து கொண்ட போலீஸ் அதிகாரி பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
நாகை மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையைத் தடுப்பதற்காக, மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ஜவஹர் உத்தரவின் பேரில், சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
தனிப்படை போலீஸாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின்பேரில், கடந்த பிப்ரவரி மாதம், 18ஆம் தேதி நாகை அக்கரைப்பேட்டை திடீர் குப்பத்தைச் சேர்ந்த மோகன் ( 37) என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் தலா 2 கிலோ வீதம் 200 பண்டல்களில் 400 கிலோ கஞ்சா மறைத்துவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
ஆந்திராவிலிருந்து கடத்திவரப்பட்ட கஞ்சாவை, நாகை வழியாக விசைப்படகு மூலம் இலங்கைக்குக் கடத்தவிருந்தது தெரியவந்தது. கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.1 கோடி.
இது தொடர்பாக படகின் காவலுக்கு நின்றிருந்த பாப்பாக்கோயிலைச் சேர்ந்த சரவணன், கீச்சாம்குப்பம் தெற்குத் தெருவைச் சேர்ந்த ஜெகதீசன், அக்கரைப்பேட்டை தெற்குத் தெருவைச் சேர்ந்த சிலம்பு செல்வன், அக்கரைப்பேட்டை திடீர் குப்பத்தைச் சேர்ந்த நிவாஸ் ஆகிய நான்கு பேரை போலீஸார் கைதுசெய்தனர். இது தொடர்பாக நாகை நகர காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்கு பதிவுசெய்து ஐந்து பேரையும் கைதுசெய்தார்.
இந்நிலையில், கஞ்சா கடத்தல் தொடர்பாக தனிப்படை போலீஸார் கைதுசெய்த ஜெகதீசன், சிலம்பு செல்வன், நிவாஸ் ஆகியோருடன் இன்ஸ்பெக்டர் பெரியசாமி நாகையிலுள்ள ஒரு சொகுசு ஓட்டலில், போலீஸ் சீருடையில் பிரியாணி சாப்பிடும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையானது.
இது குறித்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ஜவஹர் விசாரணை நடத்தி, கொடுத்த தகவலின்பேரில், தஞ்சை சரக டி.ஐ.ஜி கயல்விழி, போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமியை நேற்று காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.