மகாராஷ்டிரா முதல்வர் வீடு முன் ஹனுமன் சாலீசா என்ற மந்திரத்தை கூறப்போவதாக அறிவித்த பெண் எம்.பி. நவ்நீத் ராணா மற்றும் அவரது கணவர் ரவி ராணா ஆகியோர் 14 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கபட்டனர்.
மகாராஷ்டிராவில் அமராவதி தொகுதி சுயேச்சை பெண் எம்பி நவ்நீத் ராணா. இவரது கணவரும் பட்னேரா தொகுதி சுயேச்சை எம்எல்ஏவுமான ரவி ராணாவும் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவோடு தேர்தலில் வெற்றி பெற்றவர்கள். சமீபகாலமாக பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், முதல்வர் உத்தவ் தாக்கரே வீடு முன் அனுமன் சாலீசா என்ற மந்திரத்தை பாடப்போவதாக நவ்னீத் ராணாவும் ரவி ராணாவும் அறிவித்தனர். இதற்கு சிவசேனா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமையன்று மாலை நவ்நீத் ராணா, ரவி ராணாவை மும்பை போலீஸார் கைது செய்தனர். பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், இரு பிரிவினரிடையே மத விரோதத்தை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. நேற்று இருவரையும் மும்பை பாந்த்ராவில் உள்ள விடுமுறைக் கால நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர். ராணா தம்பதியை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இருவரது ஜாமீன் மனுக்களை உடனடியாக விசாரிக்க மறுத்த நீதிபதி, 29-ம் தேதியன்று ஜாமீன் மனு மீது விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்தார். இதையடுத்து, ரவி ராணா ஆர்தர் ரோடு சிறைக்கும், நவ்நீத் ராணா பைகுல்லா சிறைக்கும் அனுப்பப்பட்டனர்.