எரிபொருள் விலையேற்றம், எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பொருளாதார நெருக்கடிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தவறான முகாமைத்துவத்தின் ஊடாக நெருக்கடிக்கு காரணமாக அமைந்த அரசு பதவி விலக வேண்டுமென வலியுறுத்தியும் இன்றும் (20) நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது.
நேற்றைய நாளை போலவே பல இடங்களில் வாகனங்களின் மூலம் வீதிகள் வழி மறிக்கப்பட்டு போராட்டம் நடந்து வருகிறது.
தம்புள்ளை முச்சக்கர வண்டிகள் சங்கம் மற்றும் பல அமைப்புகளால் இன்று காலை முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக தம்புள்ளை ஏ-9 மற்றும் ஏ-6 பிரதான வீதிகளின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.

காலி-மாத்தறை பிரதான வீதி போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. காலி பேருந்து நிலையத்தில் வீதியை வழிமறித்து போராட்டம் நடந்து வருகிறது.
பொலன்னறுவையில் இடம்பெறும் போராட்டம் காரணமாக பொலன்னறுவை – கொழும்பு பிரதான வீதி மூடப்பட்டுள்ளது. புதிதாக பதவியேற்ற அமைச்சர் சிறிபால கம்லத்தை பதவி விலகுமாறு போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பாணந்துறை நகரப் பகுதியில் நேற்று முதல் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. நகரத்தின் அனைத்து திசைகளிலும் வீதிகள் முற்றாக மூடப்பட்டுள்ளது.
கொழும்பு- காலி வீதியின் போக்குவரத்து பலபிட்டிய நகரில் முற்றாக தடைப்பட்டுள்ளது. அங்கு வீதியை வழிமறித்து போராட்டம் நடந்து வருகிறது.
தங்காலையிலுள்ள மஹிந்த ராஜபக்சவின் கார்ல்டன் இல்லத்திற்கு அருகில் வீதியை வழிமறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புத்தளம் வீதியில் ராஜாங்கணையில் வீதி வழிமறிக்கப்பட்டு போராட்டம் நடந்து வருகிறது.