ரம்புக்கனையில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கு பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது பொலிசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். 16 பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதர் தனது ருவிற்றரில்,
ரம்புக்கனை சம்பவம் தொடர்பான நம்பகரமான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும். ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான மக்களின் உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான ஐ;நா வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கர் தனது ருவிற்றரில்,
ரம்புக்கனையில் போராட்டக்காரர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆழ்ந்த கவலை கொள்கிறோம். எந்தவொரு தரப்பினரின் வன்முறையும் அமைதியான போராட்டக்காரர்களின் உரிமைகளைத் தடுக்கிறது. குடிமக்களைப் பாதுகாப்பதற்கும், அடிப்படை சுதந்திரங்களைப் பயன்படுத்துவதற்கான அவர்களின் உரிமையைப் பாதுகாப்பதற்கும் தேவையான குறைந்தபட்ச அளவிற்கு சக்தியைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவது இன்றியமையாதது என தெரிவித்துள்ளார்.
சர்வதேச மன்னிப்புச்சபை வெளியிட்டுள்ள குறிப்பில்,
இன்று ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது ஒருவர் உயிரிழந்ததாகவும் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் கவலையளிக்கும் செய்திகள் வெளியாகி வருவது கவலையளிக்கிறது. அதிகாரிகள் எப்போதும் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் மற்றும் கண்டிப்பாகத் தேவையானதை விட அதிக சக்தியைப் பயன்படுத்தக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.