பன்றிகளின் உறுமலில் மறைந்திருக்கும் உணர்வுகளைக் கண்டுபிடிக்கும் முறையை ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
சுவிட்ஸர்லாந்து, டென்மார்க், நோர்வே, பிரான்ஸ், செக் குடியரசு ஆகிய நாடுகள் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் Nature எனும் சஞ்சிகையில் வெளியிடப்பட்டன.
411 பன்றிகளிடமிருந்து சேகரிக்கப்பட்ட 7,000க்கும் அதிகமான ஒலிப்பதிவுகள் ஆராயப்பட்டன.
அவற்றுள் பன்றிகளுக்குத் தீனி அளிக்கப்படும் நேரத்திலிருந்து அவை இறைச்சிக்காகக் கொல்லப்படும் நேரம் வரை பதிவான ஒலிகள் இடம்பெற்றிருந்தன.
பன்றிகளின் உறுமலில் மறைந்திருக்கும் உணர்வு நேர்மறையானதா எதிர்மறையானதா என்பதை துல்லியமாகக் கண்டறிவதில் 92 சதவீதம் வெற்றி அடைந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.
பெரும்பாலும், நேர்மறையான உணர்வுகள் சிறிய உறுமல் வழியாகவும், எதிர்மறையான உணர்வுகள் நீண்ட உறுமல் வழியாகவும் வெளிப்படுத்தப்படுவதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், பன்றிகளின் உணர்வுகளைக் கண்டறியும் கருவியை உருவாக்க ஆய்வின் முடிவுகள் வழி வகுத்துள்ளதாகக் கூறப்பட்டது.
கருவி, பன்றிகளின் நலனை பண்ணையாளர்கள் எளிதில் கண்டறிய உதவும்.
அதன் மூலம், விலங்கு நலனை மேம்படுத்தமுடியும் என்றும் நம்பப்படுகிறது.
பசுக்கள், முயல்களை விட, பன்றிகள் பலவிதமான உறுமல்களை வெளியிடுவதால் ஆராய்ச்சியை மேலும் எளிமையாக மேற்கொள்ள முடிந்ததாகக் கூறப்பட்டது.