இலங்கை தமிழ் அரசு கட்சியின் உறுப்புரிமையிலிருந்து வாலிபர் அணி பொருளாளர் பீற்றர் இளஞ்செழினை நீக்கும் முடிவிற்கு, யாழ் மாவட்ட நீதிமன்றம் 14 நாட்கள் இடைக்கால தடையுத்தரவு வழங்கியுள்ளது.
தன்னை கட்சியிலிருந்து நீக்கியது தவறு என குறிப்பிட்டு பீற்றர் இளஞ்செழியன் தாக்கல் செய்த வழக்கு, இன்று (8) விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது இந்த இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த வழக்கின் பிரதிவாதிகளாக கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, பதில் பொதுச்செயலாளர் ப.சத்தியலிங்கம், நிர்வாக செயலாளர் எஸ்.குலநாயகம் ஆகியோரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
மனுதாரர் சார்பில் சட்டத்தரணி கு.குருபரன் முன்னிலையாகியிருந்தார்.
இந்த வழக்கு எதிர்வரும் 22ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படும்.
முன்னதாக, நிதி மோசடி குற்றச்சாட்டில் பீற்றர் இளஞ்செழியனை முல்லைத்தீவு பொலிசார் கைது செய்திருந்தனர். வழித்தட அனுமதிப்பத்திரம் பெற்றுத்தருவதாக கூறி, போலி ஆவணம் தயாரித்து, பண மோசடி செய்ய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
அவர் மீது குற்றவியல் வழக்கு தொடரப்பட்டுள்ளது என குறிப்பிட்டு, இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டங்களில் தற்காலிகமாக அழைக்காமல் விடுவதென, மத்தியகுழுவில் முடிவெடுக்கப்பட்டது.
எனினும், மத்தியகுழுவிற்கு தெரியாமல் பீற்றர் இளஞ்செழியனை தற்காலிகமாக நீக்கும் முடிவு அறிவிக்கப்பட்டதாக, கட்சிக்குள் ஒரு தரப்பு விமர்சனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.