இலங்கை முழுவதும் தற்போது அறியப்பட்ட பெயரான ஞானாக்காவின் புகைப்பட தொகுப்பு இது.
அனுராதபுரத்தை சேர்ந்த ஞானாக்கா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சோதிடருமாவார். ஆளும், எதிர்க்கட்சிகளின் பிரமுகர்கள், இராணுவ, பொலிஸ் அதிகாரிகள் பலர் ஞானாக்காவின் ‘வாக்கை’ நம்பியிருப்பதால், அனுராதபுரத்தில் ஞானாக்கா தனி சாம்ராஜ்ஜியமே கட்டியெழுப்பியுள்ளார்.
முறைகேடாக சொத்துக்கள் சேகரித்தல், அரச நிலத்தை அபகரித்து ஹொட்டல் கட்டியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் அவர் மீது உள்ளாக சிங்கள ஊடகங்களும் வெளிப்படுத்தி வருகிறது.
உள்ளூர் மக்கள் அவரை பெரிதாக நம்பாத போதும், அரசியல்வாதிகள் அவரை தீவிரமாக நம்புகிறார்கள். பிரமுகர் ஒருவர் பிரதமர் பதவியை பெற ஞானாக்காவின் உதவியை நாடிச் சென்றதாகவும், ஆனால் அவரை பிரதமருக்கு முயற்சிக்க வேண்டாமென்றும், ஜனாதிபதியாவார் என்றும் ஞானாக்கா தெரிவித்ததாக கூறப்படுகிறது. அவர் பின்னர் ஜனாதிபதியாகியுள்ளார்.
கொழும்பு மாவட்டத்தை சேர்ந்த ஆளுந்தரப்பு பிரமுகர் ஒருவர் அமைச்சு பதவிபெற ஞானாக்காவிடம் சென்றுள்ளார். அவருக்கு அமைச்சு பதவி கிடைத்துள்ளது. இதற்கு பரிகாரமாக, அனுராதபுரத்தில் சொகுசு வீடொன்றை ஞானாக்காவிற்கு அவர் பரிசளித்துள்ளார். எனினும், அவரது அமைச்சு பதவி பின்னர் பறிக்கப்பட்டது.
1988,89 காலப்பகுதியில் வைத்தியசாலை சிற்றூழியராக செயற்பட்ட ஞானாக்கா, பின்னர் குறிசொல்ல ஆரம்பித்துள்ளார். அவரது கணவரும் நீண்டகாலத்தின் பின் இறந்து விட்டார்.
வைத்தியசாலை சிற்றூழியராக அவர் பணியாற்றியிருந்த போதும், ஞானாக்காவின் உண்மையான பெயரை இதுவரை யாரும் கண்டுபிடிக்கவில்லை.
காளியின் அருள் தனக்கிருப்பதாக கூறும் ஞானாக்கா, காளி கோயிலொன்றை கட்டி குறிசொல்லி வருகிறார்.
அண்மை நாட்களில் ஞானாக்காவிற்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்படும் செய்திகளும், புகைப்படங்களும் வெளியாகியிருந்தன.
ஞானாக்கா ஒரு சூனியக்காரியென்றும், அவரது ஆலொசனைப்படியே கோட்டாபய நாட்டை நிர்வகித்து வருவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.