ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்களை வீட்டுக்கு செல்லுமாறு தெரிவித்து பௌத்த குருமாரும், ஆசிரியர்களும் வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
இன்று (07) பிற்பகல் வவுனியா புதிய பேருந்து நிலையம் முன்பாக ஒன்று கூடிய ஆர்ப்பாட்டக்காரார்கள் ‘ கோட்டபாய வீட்டுக்கு செல்லுங்கள், அரசாங்கமே உடனடியாக பதவி விலகு, பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கொடு’ என பதாதைகளை தாங்கியவாறும், கோசங்களை எழுப்பியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வவுனியா புதிய பேரூந்து நிலையம் முன்பாக ஆரம்பித்த ஆர்ப்பாட்டமானது ஹொரவப்பொத்தானை வீதியூடாக சென்று பசார் வீதியை அடைந்து அங்கிருந்து மணிக்கூட்டு கோபுர சந்தி ஊடாக பழைய பேரூந்து நிலையத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் அடைந்ததுடன், பழைய பேரூந்து நிலையம் முன்பாக ஏ9 வீதியை மறித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 30 நிமிடங்கள் ஏ9 வீதியூடனான போக்குவரத்துக்கள் பாதிப்படைந்தன.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் பௌத்த மதகுருமார், ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
