தளபதி 66 படத்தில் நடிகை ரஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் அடுத்து பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி படைப்பள்ளி இயக்கத்தில் விஜய் அடுத்ததாக நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை வம்சியின் சொந்த தயாரிப்பு நிறுவனமாக ஸ்ரீ வெங்கடேஸ்வரா நிறுவனத்தின் கீழ் தில் ராஜு மற்றும் சிரிஷ் இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.
இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக உள்ளது. இந்தப் படத்தில் நடிகை ரஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிப்பதாக கடந்த சில மாதங்களாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அது உறுதியாகியுள்ளது.
இன்று ரஷ்மிகா தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அதையடுத்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த படக்குழுவினர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
தற்போது இந்திய அளவில் முன்னணி நடிகையாக முன்னேறியுள்ள ரஷ்மிகா கார்த்தி நடித்த சுல்தான் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தற்போது இரண்டாவது முறையாக தமிழில் நடிக்கிறார்.