பெல்மடுல்ல, கிரிந்தி எல்ல அணைக்கட்டில் குளிக்கச் சென்ற 16 வயது இளைஞன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்யாத மூன்று பாடசாலை மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர் பெல்மடுல்ல பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை வீட்டை விட்டு வெளியே சென்ற இவர் வீடு திரும்பவில்லை.
இதனடிப்படையில், அப்பகுதி மக்கள் இரத்தினபுரி பொலிஸில் ஞாயிற்றுக்கிழமை முறைப்பாடு செய்துள்ளனர்.
விசாரணைகளை அடுத்து நேற்று கிரிந்தி எல்ல அணைக்கட்டில் மாணவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
நண்பர்களுடன் குளித்த போது மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவருடன் குளித்துக் கொண்டிருந்த மற்ற மாணவர்கள் சம்பவம் குறித்து யாருக்கும் தெரிவிக்காமல் அங்கிருந்து சென்றதாக கூறப்படுகிறது.
அதன்படி, சந்தேகத்தின் பேரில் மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
உயிரிழந்தவரின் சடலம் கஹவத்தை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பெல்மடுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.