இலங்கையின் தற்போதைய நெருக்கடியை தமிழர்கள் சாதகமாக பயன்படுத்துகின்றனர். தேசியக் கூட்டமைப்பும் புலம்பெயர் தமிழ் மக்களும் ஆபத்தான அரசியல் பொறியை வகுத்து வருகிறார்கள். போர்வீரர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து உருவாக்கிய ஐக்கிய இலங்கைக்கு துரோகம் இழைக்க வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் வலியுறுத்துகிறோம் என தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ஜயந்த சமரவீர தெரிவித்துள்ளார்.
‘போர் வீரனை’ ‘துரோகி’யாக மாற்றும் நோக்குடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ‘ஒன்றிணைந்த பிளவுபடாத இலங்கையை’ உருவாக்குவதற்கு ஐந்து முன்மொழிவுகளை முன்வைத்ததாகவும், அது ‘தமிழீழமும் சிங்கள இலங்கையும்’ இணைந்த இலங்கை பற்றியது என்றும் சமரவீர கூறினார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு கலந்துரையாடல் தொடர்பான ஊடக அறிக்கையை வெளியிட்டு, ‘ஐக்கிய பிளவுபடாத இலங்கை’ என்ற வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளதாக தெரிவித்த சமரவீர, ஒன்றிணைந்த மற்றும் பிரிக்கப்படாத இலங்கை தொடர்பில் முன்னரும் இரு தரப்பும் கலந்துரையாடினார்களா என்பதில் சந்தேகம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது என்றார்.