நித்தியானந்தா தனக்குப் பாலியல் தொந்தரவு அளித்ததாக வெளிநாட்டு சிஷ்யை ஒருவர் இ-மெயில் மூலமாக கர்நாடக போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார்.
நித்தியானந்தா பாலியல் புகார், ஆள் கடத்தல் வழக்குகள் எனப் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிப் பிரபலமானவர். சாமியராக எவ்வளவு அறியப்பட்டாரோ, அதைவிட, குற்றச்செயல்களாலேயே அதிகம் அறியப்பட்டுள்ளார். தியான பீடத்தின் நிறுவனரான இவர்மீது ஏராளமான பாலியல் புகார்கள் நிலுவையில் இருக்கின்றன.
வழக்கு விசாரணைகளிற்கு பயந்த நித்தியானந்தா, இந்தியாவிலிருந்து தப்பியோடி தற்போது கைலாசா என்கிற தனி நாட்டை உருவாக்கி, அங்கு தனது சீடர்களுடன் வசித்துவருவதாகக் கூறப்படுகிறது. தலைமறைவாக இருக்கும் அவர், அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டுவருகிறார்.
இந்த நிலையில், வெளிநாட்டுப் பெண் ஒருவர் பெங்களூரில் உள்ள பிடதி போலீஸாருக்கு இ-மெயில் மூலம் நித்தியானந்தா குறித்துப் புகார் அனுப்பியிருக்கிறார்.
அதில் அவர், கைலாச நாட்டிலுள்ள நித்தியானந்தாவும் அவருடைய சீடர்களும், தனக்கும் அங்குள்ள பெண்களுக்கும் பாலியல் தொந்தரவு அளித்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
இதற்கு பிடதி போலீஸார், `இது மாதிரியான இ-மெயில் புகார்களை ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால், பயப்படாமல் இந்தியாவில் ஏதாவது ஒரு காவல் நிலையத்துக்கு நேரில் வந்து புகார் தெரிவியுங்கள், விசாரணை மேற்கொள்கிறோம்’ என்று பதிலளித்திருக்கின்றனர்.