பெங்களூரில், ரொய்ட்டர்ஸ் ஊடக நிறுவனத்தில் பணியாற்றும் ஒருவர், கணவரின் சித்ரவதையால் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
தலைமறைவாக இருக்கும் கணவரை பொலிசார் தேடி வரும் நிலையில் பல்வேறு அதிர்ச்சி தவல்கள் வெளியாகி வருகின்றன. அவர் தனது மனைவியை இரண்டு முறை கொல்ல முயன்றது தெரிய வந்துள்ளது.
பெங்களூரில், ரொஸ்ட்டர்ஸ் நிறுவனத்தில் உதவி ஆசிரியராகப் பணியாற்றிவந்தவர் சுருதி நாராயணன் (37). இவர் கேரளாவைச் சேர்ந்தவர்.
கடந்த 2017ஆம் ஆண்டு சுருதிக்கும் அனிஷ் கோயாடன் என்பவருக்கும் திருமணம் ஆனது. இருவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள். திருமணத்துக்குப் பின்னர் பெங்களூரில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் இருவரும் வாழ்ந்து வந்துள்ளனர்.
திருமணமாகி ஐந்து வருடங்கள் ஆன நிலையிலும், இந்தத் தம்பதியருக்குக் குழந்தை கிடையாது. இந்த நிலையில் கடந்த ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை அன்று சுருதியின் அம்மாவும், அவரின் சகோதரரும் பலமுறை சுருதிக்குப் போன் செய்திருக்கின்றனர். ஆனால், சுருதி அழைப்பை ஏற்கவில்லை.
கடந்த திங்கள் அன்று சுருதி வேலைக்கும் செல்லவில்லை. இதுவரை அப்படி அவர் இருந்ததில்லை என்பதால், செவ்வாய்கிழமை அன்று பெங்களூரில் வசிக்கும் சுருதியின் சகோதரர் நிஷாந்த் அவரின் வீட்டுக்கு நேரடியாகச் சென்று பார்த்தார்.
வீடு உள்பக்கம் பூட்டியிருந்ததால், குடியிருப்பு காவலாளிகள் உதவியுடன் பால்கனிக் கதவை உடைத்து வீட்டுக்கு உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது படுக்கை அறையில் சுருதி தூக்கில் சடலமாகக் கிடந்தார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து நடைபெற்ற விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுருதியின் அடுக்குமாடிக் குடியிருப்பில் மார்ச் 20ஆம் தேதியிட்ட மூன்று தற்கொலைக் கடிதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதில் ஒரு கடிதம் தன் கணவருக்கும், ஒரு கடிதம் காவல்துறையினருக்கும் மற்றொன்று தன் பெற்றோருக்கும் சுருதி எழுதியிருந்திருக்கிறார். தன் பெற்றோருக்கு அவர் எழுதிய கடிதத்தில், ”நான் வாழ்ந்தால் இன்னும் பல வருடங்கள் உங்களின் துன்பத்துக்கு நான் காரணமாக இருப்பேன். இறந்துவிட்டால் அந்தச் சோகம் சில நாள்கள் மட்டுமே இருக்கும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
அதேபோல தன் கணவருக்கு எழுதிய கடிதத்தில், ”எனது வாழ்க்கையை நான் முடித்துக் கொள்ளப் போகிறேன். இதனால் இருவர் சந்தோஷமாக இருப்பார்கள். ஒன்று நீங்கள். மற்றொன்று நான். இந்தச் சித்ரவதை வாழ்க்கையிலிருந்து தப்பிப்பதால் நான் மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் வாழ்க்கையில் நான் இல்லாததால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நீங்கள் மற்றொரு திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டால் காது கேட்காத, பார்வையற்ற பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளுங்கள். இல்லையென்றால் 20 நிமிடங்களுக்கு மேல் உங்களது சித்ரவதையை யாராலும் தாங்க முடியாது” என்று குறிப்பிட்டிருந்தார்.
அனிஷின் சித்திரவதையால்தான் சுருதி தற்கொலை செய்தது தெரிய வந்த பின் பொலிசாரின் விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
சுருதி தனது சம்பளத்தை பெற்றோருக்கு கொடுக்கிறார் என கூறி, அவரை அனிஷ் சித்திரவதை செய்து வந்துள்ளார். தனது குடும்பத்தினரை வீட்டுக்கு அழைக்கவும் அனுமதிக்கப்படவில்லை. குடும்பத்துடன் பேசவும் அனுமதிக்கப்படவில்லை.
சுருதியை கண்காணிக்க வீட்டில் குரல் பதிவு கருவியொன்றும், கமராவும் பொருத்தியிருந்தார்.
அனீஷ் போதைப்பொருள் கலந்த மதுவை கொடுத்து கொலை செய்ய முயன்றதாகவும், தலையணையால் அமுக்கிக் கொலை செய்ததாகவும் அவரது சகோதரர் கூறினார். பணத்துக்காக இந்த கொடூர செயலை செய்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
அவர் முன்பு சுருதியின் உடலை கடித்து பலத்த காயம் அடைந்ததாக அவரது சகோதரர் கூறினார்.
தற்போது அனிஷ் தலைமறைவாகி விட்டார். அவரை கைது செய்ய கேரள பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அனிஷின் உறவினர்கள், நண்பர்களை மையப்படுத்தி தேடுதல் நடந்து வருகிறது. ஆந்திரா, கர்நாடகா வரை தேடுதல் நடந்து வருகிறது.
பொலிசாரின் விசாரணையில், அனிஷ் இரண்டு முறை சுருதியை கொல்ல முயன்றது தெரிய வந்துள்ளது. அந்த சமயங்களில் சுருதியின் அலறல் சத்தம் கேட்டு, குடியிருப்பு காவலாளியும், அயலவர்களும் அங்கு ஓடிச் சென்றதால் அவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.
எனினும், கணவரின் சித்திரவதையை பொறுக்க முடியாமல் இறுதியில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.