‘காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளிற்கு வழங்கப்பட தீர்மானித்துள்ள 100,000 ரூபா இழப்பீடு அல்ல. அது, தற்காலிகமாக வழங்கப்படும் உதவித்தொகை. இந்த விவகாரத்தில் இறுதி தீர்மானம் எட்டப்படும் போது, அவர்களிற்கான இழப்பீட்டு தொகை தீர்மானிக்கப்படும்’ என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மாளிகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினருடனான சந்திப்பின் போது இதனை தெரிவித்தார்.
இன்றைய சந்திப்பின் போது, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு சுட்டிக்காட்டியது.
‘காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் முறையான விசாரணை நடத்தி அவர்களிற்கு என்ன நடந்தது என பொறுப்புக்கூற வேண்டும். குறிப்பாக படையினரிடம் சரணடைந்தவர்களிற்கு என்ன நடந்தது என்பதை கண்டறிய வேண்டும். காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரத்தில் சாட்சியம் உள்ளவர்களிடமாவது உடனடியாக விசாரணையை தொடங்க வேண்டும்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கு ஒரு இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கப்படுமென்ற அரசின் தீர்மானம் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல’ என கூட்டமைப்பு சுட்டிக்காட்டியது.
இதற்கு பதிலளித்த ஜனாதிபதி, ‘காணாமல் போனவர்களின் உறவினர்களிற்கு வழங்கப்படும் ஒரு இலட்சம் ரூபா இழப்பீடு அல்ல. குடும்பத்தலைவரை இழந்து அல்லது ஒரு குடும்ப உறுப்பினரை இழந்து சிரமப்படும் அந்த குடும்பங்களிற்கு தற்காலிகமான ஒரு பொருளாதார ஆறுதலே அந்த கொடுப்பனவு. அதனை இழப்பீடாக கருதி வழங்கவில்லை. காணாமல் போனவர்கள் விடயத்தில் இறுதி தீர்மானம் ஒன்று எட்டப்படும் போது, இழப்பீட்டு தொகையை நாம் தீர்மானிக்கலாம்’ என பதிலளித்தார்.