முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தமக்கு எதிராக இலங்கை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான இரண்டாவது வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது தாம் தெரிவித்த கருத்து நீதித்துறைக்கு அவமதிப்பை ஏற்படுத்தியிருந்தால் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோருவதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கின் தீர்ப்பு வரும் நாட்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2018 ஆம் ஆண்டு ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரிக்கும் உயர் நீதிமன்ற நீதியரசர் குழுவின் அமைப்பு தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் பிரதி அமைச்சருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரியில், நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் பேரில் ராமநாயக்க குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.
ஜனாதிபதியின் விசேட மன்னிப்புக்காக பல முறையீடுகள் செய்யப்பட்ட போதிலும், ராமநாயக்க தற்போது தனது சிறைத்தண்டனையை தொடர்ந்து அனுபவித்து வருகிறார்.