”எமது அழைப்பை பிரதான எதிர்க்கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் புறக்கணித்துள்ள போது, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. அவர்களிற்கு விசேடமாக நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” என தெரிவித்தார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ.
இன்று (23) ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில் உரையாற்றிய போது இதனை தெரிவித்தார்.
”வடக்கு கிழக்கில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு அதிக வாக்கு கிடைக்கவில்லை. எனினும், வடக்கு கிழக்கில் அதிக வாக்கு பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்முடன் இணைந்து செயற்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. அனைத்து தரப்பினரும், இணக்கம் கண்டால் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சனைக்கு எமது ஆட்சிக்காலத்தில் தீர்வை காண தயாராக இருக்கிறோம்” என தெரிவித்தார் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ.
ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து பல்டியடித்த டயான கமகேயும் வந்திருந்தார்.
சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் இரா.சம்பந்தன், த.சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
ஆளுந்தரப்பின் 11 பங்காளிக்கட்சிகளின் சார்பாக திஸ்ஸ விதாரண, அத்துரலிய ரத்ன தேரர் கலந்து கொண்டிருந்தனர்.
ஈ.பி.டி.பி சார்பில் கு.திலீபன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்து கொண்டிருந்தனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு சர்வகட்சி மாநாட்டில் கலந்து கொண்டதற்கு கூட்டத்தின் ஆரம்பத்திலேயே ஜனாதிபதி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
அத்துடன், அழைக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகளின் பிரதிநிதிகளின் பெயர்களை குறிப்பிட்டு, கருத்து தெரிவிக்கும்படி ஜனாதிபதியே அழைத்தார். முதலாவதாக கருத்து செல்லும்படி ரணில் விக்கிரமசிங்க அழைக்கப்பட்டார்.
அதற்கடுத்ததாக இரா.சம்பந்தனும், அடுத்ததாக த.சித்தார்த்தனும் அழைக்கப்பட்டு, கூட்டமைப்பினர் முக்கியத்துவப்படுத்தப்பட்டனர்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இதற்கடுத்ததாகவே அழைக்கப்பட்டார்.
த.சம்பந்தன், த.சித்தார்த்தன் உரைகளில், தமிழ் மக்களின் இனப்பிரச்சனை தீர்க்கப்படாமல் இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள முடியாது என குறிப்பிட்டனர்.
டயானா கமகே உரையாற்றும் போது, புலம்பெயர்ந்துள்ளவர்களின் முதலீடுகள் வரவேற்கப்பட வேண்டும், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் உதவியுடன் இலங்கை பொருளாதாரத்தை வளப்படுத்தலாம், அதற்கு இனப்பிரச்சனை முதலில் தீர்க்கப்பட வேண்டும், சிங்களவர், தமிழர் என்ற பேதங்களை மறந்து இலங்கையர்கள் என்ற அடிப்படையில் செயற்பட வேண்டுமென்றார்.