உக்ரைனின் துறைமுக நகரான மரியுபோலை சிறைபிடித்து வைத்துள்ள ரஷ்ய ராணுவ நேற்றிரவு அந்நகரின் மீது 2 சூப்பர் குண்டுகளை வீசி தாக்குதலை நடத்தியுள்ளது. மரியுபோலில் இருந்து இதுவரை 2 லட்சம் பேர் தப்பித்துள்ளனர். அந்த நகரமே கட்டிட இடிபாடுகள், இறந்தோரின் சடலங்கள் என நரகம் போல் காட்சியளிப்பதாக அங்கிருந்து வெளியேறிய மக்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையில் உக்ரைன் துணை பிரதமர் இரினா வெரெஸ்சுக் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அவர், மரியுபோலில் இருந்து கடைசி நபர் வரை எப்படியாவது மீட்போம். ரஷ்யர்களுக்கு மரியுபோலை நகரைக் கைப்பற்றுவது குறிக்கோள் இல்லை. அந்த நகரையே சாம்பலாக மாற்ற வேண்டும் என்பது தான் அவர்களின் இலக்கு என்றர்.
இதற்கிடையில் உக்ரைன் அதிபர் வொலடிமிர் ஜெலன்ஸ்கி, போப் பிரான்ஸிடம் போரை நிறுத்த உதவுமாறு கோரியுள்ளார். உக்ரைனில் ஏற்பட்டுள்ள மனித உயிர்களின் துயரத்துக்கு முடிவு கட்டுமாறு வேண்டியுள்ளார்.
மேலும், ரஷ்ய அதிபர் புதின் நேரடி பேச்சுக்கு முன்வர வேண்டும். அப்போதுதான் போர் முடிவுக்கு வரும். பேச்சுவார்த்தையின் போது டான்பாஸ், க்ரிமியா என அனைத்து விவகாரம் குறித்தும் பேசலாம் என்று கூறியுள்ளார்.
நாங்கள் சரணடையும் முன் அழிக்கப்படுவோம் என்றே கருதுகிறேன் என்றும் ஜெலன்ஸ்கி வேதனை தெரிவித்துள்ளார்.
அணு ஆயுதம்; ரஷ்யா விளக்கம்: இதற்கிடையில் ரஷ்யாவின் க்ரெம்ளின் மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் சிஎன்என் செய்தி நிறுவனத்திற்கு ஒரு பேட்டியளித்துள்ளார். அதில், “உள்நாட்டுப் பாதுகாப்பு என்பதற்கான கொள்கை குறிப்பு உள்ளது. அந்தப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டாலே நாங்கள் அணு ஆயுதம் பயன்படுத்துவோம். அது எங்களின் கொள்கையின்படி நடக்கும்” என்றார். அவருடைய கருத்துக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, அணு ஆயுதங்களை வைத்திருக்கும் ஒரு நாடு பொறுப்புணர்ந்து பேச வேண்டும். இது அப்படியான பதில் இல்லை. ரஷ்யாவின் நகர்வை அன்றாடம் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறோம் என்றார்.
உலகிலேயே ரஷ்யாவிடம் தான் மிக அதிகமான அணு ஆயுதங்கள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.