இங்கிலாந்தில் வசித்த இந்திய வம்சாவளி மாணவியொருவர் கழுத்து அறுத்து கொல்லப்பட்டுள்ளார்.
அவரது காதலன் கைது செய்யப்பட்டு, கொலைக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை (19) இந்த கொலைச்சம்பவம் நடந்தது.
லண்டனில் உள்ள கிளர்கன்வெல், ஆர்பர் ஹவுஸ் பல்கலைக்கழக மாணவர் விடுதியில், சபீதா தன்வானி என்ற 19 வயது மாணவி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக காணப்பட்டார்.
லண்டன் சிட்டி யுனிவர்சிட்டியில் உளவியல் முதலாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தவர் சபீதா.
அவர் கொல்லப்பட்டதும், விடுதியிலிருந்த சிசிரிவி காட்சிகளை பரிசோதித்த போது, இளைஞன் ஒருவர் விடுதிக்குள் வந்து போனது தெரிய வந்தது.
அந்த சந்தேகத்திற்கிடமான இளைஞன், சபீதாவின் காதலன் மஹர் மரூஃப்பை என்பதை பொலிசார் உறுதி செய்தனர்.
எனினும், அவரது இருப்பிடம் தெரியவில்லை. அவருக்கு நிரந்தர முகவரியும் இருக்கவில்லை.
பொலிசாரிடம் முன்னிலையாகுமாறு அவருக்கான அறிவித்தலை பகிரங்கமாக விடுத்த பொலிசார், பின்னர் தொலைபேசி ஊடாகவும் அவருக்கு தகவல் வழங்கினர்.
ஞாயிற்றுக்கிழமை அவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
அவசரகால ஊழியர் ஒருவரை தாக்கியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர் இன்று ஹைபரி கார்னர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவர் தனது பெயர், வயது மற்றும் அவருக்கு நிலையான முகவரி இல்லை என்பதை உறுதிப்படுத்த மட்டுமே பேசினார்.
கொலை நடந்த அன்று மாலையும் காதலர்கள் ஒன்றாக இருந்ததை சக மாணவர்கள் கண்டுள்ளனர்.




