பயங்கரவாத திருத்தச் சட்ட வாக்கெடுப்பு இன்று இடம்பெற்றது. இதில், சட்டமூலத்திற்கு ஆதரவாக 86 வாக்குகளும், எதிராக 35 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி என்பன எதிராக வாக்களித்தன.
வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் நடுநிலை வகிக்கலாமென்ற முன்மொழிவை கூட்டமைப்பிற்குள், எம்.ஏ.சுமந்திரன் முன்வைத்தார். எனினும், அதை யாரும் ஆதரிக்கவில்லை. பயங்கரவாத தடைச்சட்ட திருத்தத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டுமென்றே இரா.சம்பந்தனும் வலியுறுத்தியிருந்தார்.
எனினும், அவர் மாலையில் நடந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
இதேவேளை, தமிழ் மக்கள் தேசியக் கூட்டனியின் தலைவர் சி.வி.விக்கினேஸ்வரனும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
பயங்கரவாத திருத்தசட்டம் விவாதம் இடம்பெற்ற போது கலந்து கொண்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் மற்றும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆகிய இருவரும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது வாக்கெடுப்புக்கு முன்னதாகவே சபையில் இருந்து வெளியியேறியிருந்தனர்.
பயங்கரவாத திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், கோவிந்தன் கருணாகரம், எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், சாள்ஸ் நிர்மலநாதன், கலையரசன் ஆகியோரும், தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பவலம், செல்வராஜா கஜேந்திரன் ஆகியோரும் வாக்களித்து இருந்தனர்.
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான வினோதரராதலிங்கம் மற்றும் இரா.சாணக்கியன் ஆகிய இருவரும் பாராளுமன்ற இன்றைய அமர்வுகளில் முழுமையாக கலந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
1979ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டம் (தற்காலிக ஏற்பாடு) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போது, அப்போதைய தமிழர் விடுதலை கூட்டணி வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் விட்டது. அப்போது, இரா.சம்பந்தனும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
43 வருடங்களின் பின்னர் அதில் திருத்தம் சமர்ப்பிக்கப்பட்ட போதும் வாக்களிக்கவில்லை.