முல்லைத்தீவில் 15 வயது பாடசாலை மாணவன், போதைப்பொருள் உட்கொண்டு விட்டு, கடத்தல் நாடகம் ஆடியது அம்பலமாகியுள்ளது.
புதுக்குடியிருப்பு, கோம்பாவிலில் தனியார் கல்வி நிலையத்திற்கு சென்றுவிட்டு, வீடு திரும்பிய போது இரண்டு மாணவர்களை கடத்த முற்பட்டதாகவும், ஒரு மாணவன் கடத்திச் செல்லப்பட்ட நிலையில் வாகனத்திலிருந்து தப்பி வந்ததாகவும் தெரிவித்திருந்தார்.
கடந்த 19ஆம் திகதி மாலையில் கடத்தப்பட்டதாகவும், இரவு கடத்தல்காரர்களிடமிருந்து தப்பித்ததாகவும் அந்த மாணவன் தெரிவித்திருந்தார்.
தன்னை கடத்தியவர்கள் சிங்களத்தில் கதைத்ததாகவும், இராணுவ முகாம் அமைந்திருந்த இடத்திற்கு கொண்டு சென்ற போது தப்பி வந்ததாகவும், மயக்கம் ஏற்படுத்தும் ஸ்பிறே தனது முகத்தில் தெளித்ததாகவும் மாணவன் தெரிவித்தார்.
அத்துடன், வாகனத்திற்குள் கை, கால், வாய் கட்டப்பட்ட நிலையில் இரண்டு சிறார்கள் இருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்ததுடன், மாணவன் வைத்திய பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டார்.
இதில், மாணவன் போதைப்பொருள் உட்கொண்டிருந்தது தெரிய வந்தது.
பொலிசாரின் தொடர் விசாரணையில், சம்பவத்தன்று மாணவர்கள் தனியார்கல்வி நிலையத்திற்கு செல்வதாக கூறிவிட்டு, மாத்தளன் கடற்கரைக்கு சென்றது தெரிய வந்தது.
அங்கு நண்பர்கள் கேரள கஞ்சா உட்கொண்டுள்ளனர்.
இதன் பின்னரே, வீதியில் விழுந்து கிடந்து மாணவன் கடத்தல் நாடகம் ஆடினார். அந்த மாணவன் தேவிபுரம் பகுதியை சேர்ந்தவர்.
எனினும், அந்த மாணவர், தான் கடத்தப்பட்டதாகவே இறுதிவரை தெரிவித்தபடியிருந்தார்.
எனினும், மாணவர்கள் கடத்தப்படவில்லை, மாத்தளன் கடற்கரையில் போதைப்பொருள் உட்கொண்டு விட்டு திரும்பி வந்தார்கள் என்பது சாட்சியங்களுடன் உறுதியானது.
சம்பவத்துடன் தொடர்புடைய மற்றைய மாணவர் தவறை ஏற்றுக்கொண்டு மன்னிப்பு கோரியிருந்தார். இதையடுத்து, அவர் அறிவுறுத்தப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
கடத்தல் நாடகம் ஆடிய மாணவன் இன்று சட்ட வைத்திய அதிகாரியின் முன்னிலையில் முற்படுத்தப்பட்டார்.
நாளை அவர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார். அப்போது, அவரை சிறுவர் நன்னடத்தை இல்லத்திற்கு அனுப்ப பொலிசார் விண்ணப்பிப்பார்கள்.