பால் மா இறக்குமதியாளர்கள் விலையை அதிகரிக்க தீர்மானித்தமைக்கு அமைவாக, ஒரு கோப்பை பால் தேநீரின் விலையை 100 ரூபாவாக அதிகரிக்க அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
எரிவாயு, சீனி மற்றும் தேயிலை துாள் போன்றவற்றின் விலை அதிகரிப்பை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக அந்த சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.
தற்போதைய சூழ்நிலையில் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக சம்பத் கூறினார்.
200 மில்லிலீற்றர் பால் தேனீரில் 15 கிராம் பால்மா இருக்கும் என்றார்.
உணவக உரிமையாளர்கள் வாடிக்கையாளர்களை இழக்க விரும்பவில்லை என்றும், நீர்த்துப்போகாமல் சத்தான தேநீர் வழங்கப்படுவதை உறுதி செய்வதாகவும் அவர் கூறினார்.
இந்த முடிவை உணவகங்கள் மற்றும் கடை உரிமையாளர்களிடம் தெரிவித்ததாகவும், 50மிலி கப் டீயை ரூ.60-70க்கு விற்பனை செய்வதைத் தவிர்க்குமாறு எச்சரித்ததாகவும் சம்பத் கூறினார்.
எரிவாயு சிலிண்டர் ரூ.2,670 ஆக இருக்கும் போது கடை உரிமையாளர்கள் ரூ.5,000 கறுப்புச் சந்தை விலையில் சிலிண்டர்களை வாங்குவதாக அவர் குறிப்பிட்டார்.
ஒரு கிலோ சீனி ரூ.190 என்றும், ஒரு கிலோ தேயிலை துாள் ரூ.1,200 முதல் ரூ.1,300 வரை உள்ளதாகவும், தொழிலாளர்களின் சம்பளமும் வழங்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.
பால் மா மற்றும் இதர பொருட்களின் விலை குறையும் பட்சத்தில், ஒரு கோப்பை பால் தேநீரின் விலை குறையும் என்றார்.