முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோம்பாவில் பகுதியில் தனியார் கல்வி நிலையத்திற்கு சென்று வந்த மாணவன் வெள்ளை வாகனத்தில் கடத்தப்பட்டததாக முறையிடப்பட்டுள்ளது.
கடத்தல்காரர்களிடமிருந்து தப்பி வந்ததாக கூறப்படும் மாணவன் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புதுக்குடியிருப்பு, தேவிபுரம் பகுதியை சேர்ந்த 14 வயதுடைய மாணவன் ஒருவரே கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
நேற்று மாலை கோம்பாவிலிலுள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றிற்கு சென்று வந்த மாணவன், கல்வி நிலையத்தில் இருந்து 150 மீற்றர் தொலைவில் வெள்ளை வாகனத்தில் கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
வெள்ளை வாகனத்தில் இழுத்து ஏற்றப்பட்ட தன்னை தாக்கி, முகத்தில் ஒரு வித ஸ்பிரே தெளிக்கப்பட்டதாகவும், தனது வாயை பிளாஸ்டரால் ஒட்டப்பட்டதாகவும், வாகனத்திற்குள் இரண்டு சிறுவர்கள் வாய்,கை, கால்கள் கட்டப்பட்டிருந்த நிலையில் காணப்பட்டதாகவும் சிறுவன் தெரிவித்துள்ளார்.
காட்டு பகுதியொன்றில் வாகனத்தை நிறுத்திய போது, தான் வாகனத்தில் இருந்து தப்பியோடியதாகவும், இருவர் விரட்டி வந்ததாகவும், அவர்களை தடியால் தாக்கியதாகவும், தனது தாக்குதலில் அவர்களின் தலை, தோளில் காயமடைந்ததாகவும் மாணவன் தெரிவித்துள்ளார்.
அங்கிருந்து பிரதான வீதிக்கு வந்த மாணவன் மீட்கப்பட்டு புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தன்னை கடத்தியவர்கள் சிங்களத்தில் உரையாடியதாகவும் மாணவன் தெரிவித்துள்ளார்.