ஜனாதிபதி தற்போதைய பிரச்சனைக்கு தீர்வு காண முடியாவிட்டால் இந்த நாட்டை கொடுத்து விட்டு உங்கள் வாழ்விடமான அமெரிக்காவுக்கு செல்லுங்கள் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொது செயலாளர் மகிந்த ஜெயசிங்க தெரிவித்தார்.
வவுனியா, முஸ்லிம் மகாவித்தியாலய மண்டபத்தில் அதிபர், ஆசிரியர்கள் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் இன்று (17) இடம்பெற்ற சந்திப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நான் வடமாகாணத்தில் வந்து நிற்கின்றேன். இங்கும் ஆசிரியர்களுக்கு நிறைய பிரச்சனைகள் உள்ளன. அது தொடர்பில் பல அதிபர், ஆசிரியர்கள் வந்து கலந்துரையாடினார்கள். அவர்களது பிரச்சனைகளுக்காக எமது தொழிற்சங்கம் குரல் கொடுக்கும்.
எரிபொருள் பிரச்சனை தொடர்பாக அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவுடன் பாடசாலை ஆரம்பிப்பதற்கு முன்னரே பேசியிருந்தோம். அதற்கு எந்தவொரு தீர்வும் கிடைக்கவில்லை. இதனால் ஆசிரியர்கள், மாணவர்கள் பாடசாலைக்கு சென்று வருவது தொடர்பில் பல சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். இன்று வரை அதற்கான தீர்வு எதுவும் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை. இதனால் நகரப் பாடசாலைகளுக்கு மாணளவர்களின் வரவு குறைவாகவுள்ளது. இந்த வருடம் பாடசாலைகளின் வாயில்கள் திறக்கப்பட்டுள்ள போதும் பாடசாலைக்கு செல்வதற்கு பிள்ளைகளுக்கு வழியில்லாமால் உள்ளது.
நாட்டில் டொலரை கொண்டு வருவதற்கான எந்த நடவடிக்கையும் அரசாங்கம் முன்னெடுக்கவில்லை. வெளிநாட்டில் கடன் பெற்றுள்ளார்கள். பொருட்கள் பெற்றுள்ளார்கள். அதனால் எமது நாட்டில் டொலர் பற்றாக்குறை அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இந்த நாட்டில் தேவையான பல விடயங்களைச் செய்து வெளிநாடுகளில் இருந்து கடன் வாங்காது விட்டால் டொலர் பிரச்சனையை தீர்க்க முடியும். இந்த அரசாங்கத்தால் நாட்டை காப்பாற்ற முடியாது. நாட்டு பிரச்சனைகளை இந்த அரசாங்கத்தால் தீர்க்க முடியாது உள்ளது. அதனால் புதிய அரசாங்கம் ஒன்றை கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
ஜனாதிபதியால் நாட்டை காப்பாற்ற முடியவில்லை. கொரோனாவால் தான் இந்த நாட்டில் பிரச்சனை என பொய் கூறுகிறார்கள். ஆசிய நாடுகளில் பங்களாதேஸ், இந்தியா போன்ற ஆசியா நாடுகள் எல்லாவற்றிலும் கொரோனா பிரச்சனை இருந்தது. அங்கு டொலரை கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளார்கள். எமது நாட்டின் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்களின் இயலாமையால் தான் இந்த நாட்டின் நிலைக்கு கொரானா என சாட்டுகின்றார். கொரானாவால் தான் இந்த நிலை என அவர் கூற முடியாது. நேற்று இரவு 11 நிமிடத்தில் அவர் கதைத்த விடயத்தில் இதை தான் சொல்லுகிறார். தற்போதைய பிரச்சனைக்கு ஒரு தீர்வு காண உங்களால் முடியாவிட்டால் இந்த நாட்டை கொடுத்து விட்டு உங்கள் வாழ்விடமான அமெரிக்காவுக்கு செல்லுங்கள. இந்த நாட்டை சிறப்பாக கொண்டு செல்ல ஆட்கள் உள்ளார்கள் எனத் தெரிவித்தார்.