தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்டமூலத்தில் உள்ள மூன்று முக்கிய பகுதிகள் குறித்து ஆழ்ந்த கவலையை ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நஷனல் ஸ்ரீலங்கா வெளிப்படுத்தியுள்ளது. அதன் தற்போதைய வடிவத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டால், சில உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் மீதான தாக்கம் ஏற்படுமென எச்சரித்துள்ளது.
தீவிரமான கவலைகள் தீர்க்கப்படும் வரை தரவுப் பாதுகாப்பு சட்டமூலத்தை நிறைவேற்றக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளது.
தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு இன்று (9) நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள நிலையில், ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நஷனல் ஸ்ரீலங்கா இந்த கவலைகளை எழுப்பியுள்ளது.
இந்த சட்டமூலத்தை நிறைவேற்ற அவசரப்பட வேண்டாமென்றும் அது நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு அழைப்பு விடுத்துள்ளது.
பத்திரிகை துறையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும், தகவல் அறியும் உரிமையில் தாக்கத்தை ஏற்படுத்தும், தரவுப் பாதுகாப்பு ஆணைக்குழு பரந்த அதிகாரங்களைக் கொண்டிருந்தாலும், அது சுதந்திரமானது அல்ல.இதனால் அரசியல் தலையீடுகள் ஏற்படுமென்ற 3 முக்கிய கவலைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



